ஆண்டவர்கள் கண்ட சுவர்ணபூமி
( குறிப்பு: இக்கட்டுரை மலேசியாவில் 'விடியல்' வாரப்பத்திரிக்கையில் வெளியீடு கண்டுள்ளது. கட்டுரையாசிரியர் : சரஸ்வதி கந்தசாமி )
பகுதி : 1
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் ஆட்சியியாளர்களின் காலத்தில் வெறும் சஞ்சிக்கூலிகளாக கொண்டுவரப்பட்டதினால் தான் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே மக்கள் தொடர்பு ஏற்பட்டது என்ற ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. இது அழிக்கப்பட வேண்டும்.
சுமார் 3000 வருடங்களுக்கு முன்னரே தமிழ் வர்த்தகர்கள் அலெக்ஸாண்டியா, ரோமாபுரி, கிரேக்கம் முதலிய மேற்கத்திய நாடுகளுடன் வாணிபம் புரிந்தனர். கிழக்கே சீனா மற்றும் இதர நாடுகளுடனும் வாணிபம் நடத்தி வந்தனர். இந்திய நாட்டிலிருந்து வாசனைத் திரவியங்கள், துணிமணிகள், முத்து, வைரம், தேக்கு, அரிசி, யானைத்தந்தம் ஆகிய பொருட்களை முக்கிய ஏற்றுமதி பொருட்களாக கொண்டு சென்றனர். இதனால் தமிழ்மொழி-சமஸ்கிருத வார்த்தைகள் மற்ற மொழிகளில் கலந்தொலிக்கின்றன. உதாரணத்திற்கு அரிசி என்ற சொல் கிரேக்க மொழியில் 'ஒரைசா' என்றும் ஆங்கிலத்தில் 'ரைஸ்' என்றும், இஞ்சி வேர் என்ற தமிழ்ப்பதம் கிரேக்க மொழியில் 'ஜின்ஜிவா' என்றும் ஆங்கிலத்தில் 'ஜிஞ்ஜர்' என்றும் மருவி வழ்ங்கப்படுகிறது. மலாய் மொழியின் சொல்வளத்திற்கும், தமிழ்-சமஸ்கிருதம் பெரும் பங்காற்றியுள்ளன என்பதும் நாம் அறிந்ததுதான்.
வெகுகாலமாக இந்தியாவிலிருந்து சீனா மற்றும் அதைச்சுற்றியுள்ள பிரதேசங்களுக்குச் சென்று கொண்டிருந்த கப்பல்கள் மலாக்கா ஜலசந்தியைப் பயன்படுத்தின. இதனால் மலாக்கா ஜலசந்தியின்(நீரிணை) இரு கரைகளிலும் இந்திய வர்த்தகர்கள் பண்டக சாலைகள் உருவாக்கினர். பிறகு இந்த பண்டக சாலைகள் துறைமுகமாக உருவகம் பெற்றன. அதனால் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மலாக்கா, சிங்கப்பூர், கெடா, சயாம் ( தாய்லாந்து ) போன்ற கடல்புற இடங்களில் இந்தியர்களின் குடியிருப்புகள் ஏற்பட்டன. இந்த குடியேற்றப் பகுதிக்கு இந்திய நாட்டிலிருந்து போர்வீரர்கள், புரோகிதர்கள், சிற்பிகள் என வந்து சேர்ந்தனர். இவர்களின் மூலம் இந்திய பழக்க வழக்கங்கள், அரசியல்முறை, சமயக் கோட்பாடுகள் இங்கே பரவின. மீன் பிடித்து, வேட்டையாடி, பரண் மீது குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வந்த அக்கால மக்களுக்கு, இந்தியர்கள் முதன் முதலில் நாகரிக வாழ்க்கை முறைகளை கற்றுக் கொடுத்தனர். மேலும் பயிரிடுதல், நீர்ப்பாசனம் செய்தல், நெசவு செய்தல், வியாபார முறைகள், நாணயத்தின் உபயோகம், வீடு கட்டுதல்,வைத்திய சாஸ்திரங்கள் போன்றவற்றையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
ஆகவே நமது முன்னோர்கள் இம்மண்ணில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும், வாணிபம், அரசியல், கலாச்சாரம், வாழ்க்கைமுறை போன்றவற்றை கற்றுக் கொடுத்தனர் என்பதை முதலில் நாம் புரிந்து பெருமைப்பட வேண்டும்.
எனவே, இந்தியர்கள் நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்கள் என்ற பொய்யான தோற்றம் முதலில் அழிக்கப்பட வேண்டும். இம்மண்ணின் வளப்பதிற்கு இந்தியர்களின் பங்கு கடந்த இரண்டு நூற்றாண்டுகள் தான் என்ற மாயை நிராகரிக்கப்பட வேண்டும்.
மலேசியா அமைவதற்கும் முன், மலேயா உருவாவதற்கும் முன், பிரிட்டிஷ் மற்றும் போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் மலேயாவை ஆளுவதற்கும் முன், இஸ்லாம் இந்நாட்டிற்கு வருவதற்கும் முன், இஸ்லாம்,கிறுஸ்துவ மதம் தோன்றுவதற்கும் முன், கால் பதித்து, வாணிப வாய்ப்புக்கள் ஏற்படுத்தி ஆட்சிமுறை அமைத்து, துறைமுகப் பட்டினங்களை உருவாக்கி, உலக நாடுகளுடனான வாணிபத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்நாட்டை வளப்படுத்தி உலக வரைபடத்தில் மலேசியா-சிங்கப்பூருக்கு முதல் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் இந்தியர்கள். இம் மண்ணிற்கு முதன் முதலில் "சுவர்ணபூமி" என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தவர்களும் இந்தியர்கள்தான், அதுவும் தென்னிந்தியர்கள்தான் என்ற பெருமையும் நமக்குள்ளது.
பண்டைக் காலத்திலேயே, தென் இந்தியாவின் கிழக்கு மலைத்தொடரை சார்ந்த பிரதேசங்களில் இருந்து வந்த தமிழர்கள் மலேசியா உட்பட அநேக கிழக்கிந்திய நாடுகளில் ராஜியங்கள் அமைத்து முழு வல்லமையுடன் ஆட்சி புரிந்தனர் என்பது சரித்திரம். அக்காலத்தில் இம்மண்னில் சிறுபான்மையாக இருந்த சுயகுடியினருக்கு முதன் முதலின் நாகரிகம் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் தான் என்று பழைய சரித்திர நூல்கள் கூறுகின்றன.
கொந்தளிப்பான வங்காள வளைகுடாவை கடந்த பின்னர் இந்திய கப்பல்களுக்கு ஏற்ற இடமாக கெடாவில் உள்ள குனோங் ஜெராய் மற்றும் சற்று தெற்கே உள்ள சுங்கை பூஜாங் ஆகிய பிரதேசங்கள் நீர்வளம் மற்றும் நிலவளம் பொருந்தியவையாக இருந்ததால் இந்தியர்களின் முதல் குடியேற்றமும் அதைத் தொடர்ந்து இம் மண்ணில் முதல் சாம்ராஜ்யமும் அங்கேயே தோன்றியது. பூஜாங் நதிக்கரையில் முதல் பட்டினம் உருவானது. அதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் அடுத்தடுத்து பல குடியிருப்பு பகுதிகள் உருவாயின. அந்த குடியிருப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு அந்த இந்துராஜ்யம் விரிவாக்கப்பட்டது. அது சயாமின் தென் பகுதி, பெர்லிஸ், கெடா,பட்டவொர்த் ஆகிய பகுதிகளுக்கு விரிந்து பரவி இருந்தது.
இம் மண்ணின் அந்த முதல் இந்து சாம்ராஜ்யத்தை 'தர்மராஜா' என்றழைக்கப்பட்ட மாறன் மகாவம்சன் ஆட்சி புரிந்தார். அதுதான் 'லங்காசுகா' என்ற முதல் இந்து சாம்ராஜ்யம். அரசர் மாறன், தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் ஒரு கோட்டையைக் கட்டி, ராஜாங்கத்தில் பல இலாக்காக்களை ஏற்படுத்தினார். நிர்வாகத்தில் சுய குடிகளையும் இந்தியாவிலிருந்து வந்த ஆட்களையும் நியமித்து நல்லாட்சி புரிந்தார். பள்ளிக்கூடங்களை நிறுவினார். முக்கியமாக சிவன் கோவில் கட்டி மக்களிடையே சமயப் பற்றை வளர்த்தார். இங்கே மீன்பிடித்து, வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வந்த மலாய் சமூகத்தினருக்கு ஆட்சியில் பணி புரியவும் இடமளித்தார்.
பேரரசர் மாறனின் மூத்த மகன் வடக்கே அயோத்தியா ( சயாம் ) என்ற சாம்ராஜ்யத்தை நிறுவி ஆட்சி புரிந்தான். இரண்டாவது மகன் தெற்கே கங்கா நகரம் (பேராக்) என்ற ஒரு ராஜ்யத்தை ஆண்டு வந்தான். மாறனின் அழகும் அறிவுமிக்க மகள், கிழக்கே பத்தினி ( பட்டாணி ) என்ற சாம்ராஜ்யத்தை அமைத்து ஆண்டு வந்தாள்.
.................( தொடரும் ).............................................................................................................................
1 Comments:
சுவாரசியமான தகவல்களாக இருக்கே,
அடுத்த பகுதியை எப்போ போடுவீர்கள்
Post a Comment
<< Home