.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Saturday, June 12, 2004

விடுகதை - வாய்மொழி இலக்கியம் !

ஒருவரின் நுண்ணறிவை ஒருவர் அறிவதற்கு எழுப்புகின்ற புதிர்களே விடுகதைகள் எனப்படும். ஏட்டில் எழுதப்பெறாத இலக்கியம் என்று விடுகதைகளைக் கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விடுகதைகள் போடுவதைக் காணலாம்.இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் கூறுவார்கள்.

பொதுவாக விடுகதைகள் இரண்டு வகையாக அமைந்துள்ளன. ஒன்று கவிதை நடையில் அமைந்துள்ளவை; மற்றொன்று உரைநடையில் அமைந்தவை. மக்களின் சிந்தனைத் திறனையும் கற்பனைத் திறனையும் விடுகதைகள் பெரிய அளவில் காட்டுகின்றன.சில விடுகதைகள் எதுகை - மோனையுடன் அழகான சொல்லாட்சி பெற்று விளங்குகின்றன.

எல்லாக் காலங்களிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் கேட்டின்புறும் வகையில் அமைந்திருப்பது விடுகதைகள் ஆகும். குழந்தைகள் இருக்கும் வீட்டில், ஓய்வு நேரத்தில் விளையாட்டாக விடுகதை போட்டுப் பாருங்களேன்...ஒரே மகிழ்ச்சியலை எழும்பும். வேடிக்கை என்ன வென்றால் ...நாம் போட்ட விடுகதைகளை பிறகு வீட்டிற்கு வருபரையெல்லாம் பார்த்து குழந்தைகள் மழலை மொழியில் 'அது என்ன ?...அது என்ன ? ' என்று கேட்கும் விதமே தனி அழகு!

விடுகதைகளைப் பெரும்பாலும் யாரும் எழுதி வைப்பதில்லை.(என் கருத்து தவறாகக் கூட இருக்கலாம்) குறைந்த அளவிலேயே விடுகதைகள் பற்றிய புத்தகங்களைப் பார்த்திருக்கின்றேன். அது ஒரு புறம் இருக்கட்டும். சரி, இப்போது சில விடுகதைகள் போடட்டுமா? ( என்ன எங்களையும் குழத்தைகள் பட்டியலில் சேர்த்து விட்டீர்களா.? என்று கேட்பது புரிகிறது. உங்களை வளர்ந்த குழந்தை உள்ளம் கொண்டவர்கள் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா ? )


1. அகத்தில் அகம்
சிறந்த அகம்.
அது என்ன அகம் ?

2. வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி
அது என்ன ?

3. குட்டைப் பெண்ணுக்குப்
பட்டுப் புலவை.
அது என்ன ?

4. ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?


விடை தெரிந்தால் பதில் போடுங்கள்; வீட்டில் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள்!

பி.கு : புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் குழந்தைகளிடம் இம்மாதிரி விடுகதைகள் போடுவது வழக்கில் உள்ளதா ? மறுமொழி எழுதலாமே..!

1 Comments:

At Sun Jun 13, 12:38:00 PM 2004, Blogger Vasudevan Letchumanan said...

விடுகதைக்கான விடைகள்:
1. புத்தகம்
2. மழை
3. வெங்காயம்
4. தேன்கூடு

 

Post a Comment

<< Home