.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, June 11, 2006

7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடு


கடந்த ஜூன் 4 முதல் ஜூன் 7-ஆம் திகதி வரை கோலாலம்பூர், மலேசியாவில் "7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடு" மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடு மலேசியாவில் நடைபெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே, 1994-இல் 2-வது மாநாட்டை மலேசியா ஏற்று நடத்திய அனுபவம் உள்ளது. கடந்த காலத்தைக் காட்டிலும் இம்முறை ஏற்பாடு மிக விமரிசையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம், மலாயா தமிழ் ஆசிரியர்கள் மன்றம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்றம் ஆகியவை ஒன்றிணைந்து நடத்தி 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பேராளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

1992-இல் சிங்கப்பூரில் ( முதலாவது மாநாடு ), 1994-இல் மலேசியாவில் ( 2-வது ), 1996-ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டிலும் ( 3-வது ), நான்காவது மாநாடு 1998-இல் சென்னையிலும், 5-வது மாநாடு 2000-ஆம் ஆண்டில் மீண்டும் சிங்கப்பூரிலும், 6-வது மாநாடு 2002-இல் தென் ஆப்ரிக்காவிலும் முறையே நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக 2004-இல் இலங்கையில் நடைபெறவிருந்தது; நடைபெறவில்லை. உலகத் தமிழாசிரியர் செயலகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டாவதது முறையாக மலேசியாவில் " தமிழ்மொழி கற்றல் கற்பித்தல்: புதிய சவால்களும் அணுகுமுறைகளும் " எனும் கருப்பொருளுடன் 2006-இல் 7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநாட்டை மாண்புமிகு பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்; திறப்புரையாற்றினார்.


இம்முறை 7-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவராக இணைப்பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்களும், கௌரவச் செயலாளராகத் திரு. ச.சகாதேவன் அவர்களும் பொறுப்பேற்றிருந்தனர்.


"மனித உறவுகளை இணைப்பது மொழி. மொழி இல்லையெனில் உறவுகள் இல்லை. அந்த உறவுகளும் - அந்த மொழியும் நிலைத்து நின்றால்தான்,அடுத்துவரும் தலைமுறையினர் நமது பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும் - பொருள் செறிந்த நமது பண்பாடுகளைப் புரிந்து நன்னெறி மிக்க மனித சமுதாயத்தை உருவாக்க முடியும்!" என்று மாண்புமிகு அமைச்சர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்ற இந்த 7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடுக்கு மலேசியாவிலிருந்து 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ( பேராளர்கள் ), வெளிநாட்டிலிருந்து சுமார் 200 கல்வித் துறையைச் சார்ந்த பேராளர்களும் கலந்து பயனடைந்தனர். இம்முறை கனடா, சிங்கப்பூர், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மொரிசியஸ், தென் ஆப்ரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து பேராளர்கள் வந்து ஆய்வுக்கட்டுரைகள் படைத்தனர்.

சுமார் 61 ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாக சிறப்பனதொரு ஆய்வடங்கல் வருகைப்புரிந்த அனைத்துப் பேராளர்களுக்கும் மாநாடு துவங்குவதற்கு முன்பே வழங்கப்பட்டது தனிச்சிறப்பு!

0 Comments:

Post a Comment

<< Home