உள்நோக்கியப் பயணம் உங்களை விழிப்படையச் செய்யும்!
'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற'..( குறள்: 34 )
'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பது சான்றோர் வாக்கு. உண்மையொளி உதிக்கும் இடமும் உள்ளம்தான். வெளியில் தோன்றும் யாவும் உள்வெளிப்பாடுதான் என்பதை சித்தர் பாடல்....
'அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே!" ...கூறுகிறது.
அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க ஓடுகிறோம்; வெளிநோக்கியப் பயணத்தில்.நவீன வாழ்க்கையின் கவர்ச்சி நம்மை அதிவேகமாக ஓட வைக்கிறது -- இலக்கை நோக்கி. ஒரு வகையில், இவ்வெளிநோக்கியப் பயணத்தில் பழகிவிடுகிறோம். காலவோட்டத்தில் இது இயந்திரத்தனமான வாழ்க்கைப் பயணமாகிறது.
காலையில் எழுந்தது முதல், இரவு நித்திரை கொள்ளும்வரை எல்லாமே விரைவு, வேகம், அவசரம் எனும் சார்புடைய சொற்களில் வாழ்க்கை அடங்கிவிட்டதோ! என்று எண்ணத் தோன்றுகிறது. பல வேளைகளில் அளவுக்கு அதிகமான வெளி விசயங்களில் மூழ்கித் தவிக்கிறோம். நிலை தடுமாறி விழவும் செய்கிறோம். உள்ளம் உறுதி பெற்றவர் எழுகிறார்; தடுமாற்றம் அடையும் பலர் மீள முடியாமல் தவழ்கிறார். சிக்கல் ஏற்பட்ட உள்ளம் தளர்ச்சியடைகிறது. அதனால் விரக்த்திக்குள்ளாகின்றனர், பலர். அவர்கள் பார்வைக்கு 'வழ்க்கைப் பாதை' மங்கலாகத் தெரிகிறது. அலை போல் வரும் பிரச்னைக் கடலில் தத்தளிக்கின்றனர்.
இவற்றுக்கெல்லாம் தீர்வு ஏதும் உண்டா..? என்று நெஞ்சம் விம்முகிறது; ஓசை எழாமல் உள்ளுக்குல் அழுகிறது.
எங்கிருந்து வெளிநோக்கியப் பயணத்தைத் தொடர்ந்தார்களோ -- அங்கிருந்தே வருகிறது தீர்வு காணும் நல்வழி --- சரியான பாதையைக் காண்பிக்கிறது -- ஆறாம் அறிவாகிய 'மனம்'. எவ்வாறு ?
ஆன்மீகப் பயணமாக.....உள்நோக்கியப் பயனத்தில்.
அங்கிங்கெனாதபடி...உள்ளத்தில் -- மனதின் மையத்தில் இருக்கிறது -- அற்புதமான விசை!
அது கொஞ்சம் தூசு படிந்திருக்கிறது. தட்டுங்கள் மன விசையை! அபரிதமான அற்றல் வெளிப்படும்.
மெய்ஞ்ஞான உணர்வுக்கு வழிகாட்ட உள்நோக்கியப் பயணம் அவசியம்! நல்வாழ்வுக்கு சுடர் ஏற்றி -- உள்ளொளியைக் காட்டவே உள்நோக்கியப் பயணம். உயர் பண்பை வளப்படுத்தி வாழ்க்கையின் தாத்பரியத்தை உணர்த்தவே உள்நோக்கியப் பயணம்.
மன சாந்தி - அமைதி - பேரானந்த நிலை இவற்றில்தான் வாழ்வின் உன்னதம் பொதிந்துள்ளது. யதார்த்த வாழ்வின் இலக்கு -- இலட்சியம் முக்கியம்தான். அதற்கு, போகின்ற பாதை 'சுமை' குறைந்ததாகவும் அன்றாட நிகழ்வுகள் 'சுவை'நிறைந்ததாகவும் அல்லவா இருக்க வேண்டும்!
அவ்வாறு மாற்றி அமைப்பதற்கான ஒரு சூட்சும விசை நம் மனதில் இருப்பதை அறிந்து, உணர்ந்து தெளிவோம். வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோம்!
எனவே....வாருங்கள் 'மனத்துக்கண் மாசிலன்' ஆவோம்.
அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.
2 Comments:
அருமை வாசுதேவன். தேவையான கருத்துக்கள்.
சுயத்தை அறிதல் வாழ்க்கையை இலவம்பஞ்சு போல் லேசாக்கிவிடும். நல்ல கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்
சுகா
சுகா,
அன்பு கூர்ந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
Post a Comment
<< Home