மூவாரில்-மாநில அளவிலான "முத்தமிழ் விழா 2004"
மலேசிய நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மொழிக்காக மட்டும் அல்ல என்பதை அவ்வப்போது நடைபெற்று வரும் கலை, இலக்கியம் மற்றும் சமயம் தொடர்பான நிகழ்ச்சிகள் மெய்ப்பித்து வருகின்றன.
பிற மாநிலங்களில் இயல், இசை, நாடகம் அடங்கிய முத்தமிழ் விழாக்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும், ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 'முத்தமிழ் விழா'வை வட்டாரம், மாநிலம் அளவில் நிகழ்த்தி வருவது தமிழுக்கு ஆற்றி வரும் மகத்தான காரியமாகும்.
நேற்றைய முன்தினம், ( 30.10.2004 - சனிக்கிழமை ) மூவார் பட்டினத்தில் உள்ள தமிழ்ப்பள்ளியில் மிகவும் கவரும் வகையில் ஜோகூர் மாநில ரீதியான 'முத்தமிழ் விழா 2004' நடைபெற்றது. ஜோகூர் மாநிலத் தலைமையாசிரியர் மன்றத்தினரால் நடைபெற்றுவரும் இவ்விழாவானது 12-வது அகவையைத் தொட்டுவிட்டது கண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். மாநில ம.இ.கா தொடர்புக்குழுத் தலைவரும் மாநில ஆட்சி மன்ற உறுப்புனருமாகிய மாண்புமிகு டத்தோ K.S.பாலகிருஷ்ணன் அவர்கள் நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார். இனி ஆண்டுக்குப் பத்தாயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்க இசைந்துள்ளது போற்றுதலுக்குரியது. அவர் தமதுரையில் மேலும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.....அதாவது 'முத்தமிழ் விழா'வை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதேயாகும். தலைமையாசிரியர்களுக்கெல்லாம் இது 'தலையாயச் சவால்' என்பது என் கருத்து.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 'முத்தமிழ் விழா' போட்டிகளில் பங்கு கொள்கின்றனர். தமிழ்க் கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, புதிர்ப் போட்டி, திருக்குறள் கதை கூறும் போட்டி, இசைப் பாடல், நடனம் மற்றும் நாடகம் எனப் பற்பலக் கூறுகளில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை வெளிக்கொணரும் ஒரு களமாகத் திகழ்கிறது 'முத்தமிழ் விழா'. வட்டார ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் முதல்நிலை அடைந்தவர்கள் மாநில அளவில் இறுதிச் சுற்றில் பங்கேற்று வருகின்றனர்.
போட்டிக்கு முன் மாணவர்களைத் தேர்வு செய்வதிலிருந்து அவர்களுக்குப் பயிற்சி அளித்துத் தயார் படுத்துவதோடு மட்டுமல்லாமல், போட்டிக்குத் தேவையான துணைக் கருவிகள் மற்றும் உபகரணப் பொருட்களைத் தயாரிப்பதிலும் ஆசிரியர்கள் பெரும் சிரத்தை மேற்கொண்டு வருவது பாரட்டுதலுக்குரியது. போட்டிகளில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்கு மகிழ்ச்சி. மாணவர் பருவத்தில் அவர்கள் பெறும் அனுபவங்களில் மகத்தான
ஒன்றாக இது போன்ற நிகழ்வுகள் மனதில் பதியும். ஆசிரியர்களுக்கு ? உளப் பரினாமம் ஏற்படலாம்.....சக ஆசிரியர் நண்பர்களின் பாராட்டுகள் உற்சாகம்
ஊட்டலாம்.....இவை அவர்களின் பணிக்காலச் சுவடுகள்!
விழா ஏற்பாட்டுக் குழுவினர்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
0 Comments:
Post a Comment
<< Home