.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, June 12, 2006

தலைமையுரை - ஏற்பாட்டுக்குழு தலைவர் -7-வது உ.த.மா

இணைப் பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், மலேசியா.
தலைமையுரை


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (1)

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!

மாண்புமிகு அமைச்சர் பெருமகனார் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களே,
மாபுமிகு துணை அமைச்சர்களே, பெருமதிப்பிற்குரிய டான்ஸ்ரீ K.R.சோமசுந்தரம் அவர்களே..

இன்று மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றிலே ஒரு பொன்னாள்! இன்று வரலாறு படைக்கப்படுகின்றது. மலேசியத் தமிழர்களுக்கும் இத்திருநாட்டிற்கும் சுமார் 1000 ஆண்டுகள் வரலாறு உண்டு. இராஜேந்திரச் சோழனின் ( என் பெயரைக் கொண்ட ) வருகையும் அவன் ஆண்ட அரசின் சான்றுகளும் இன்றும் கடாரத்தில் உள்ளன.

எனினும் அதிகமான தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நாட்டிற்கு வரத்துவங்கினர். அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலும் அதிகமான தமிழர்கள் இந்நாட்டிற்கு வந்தனர். 20-ஆம் நூற்றாண்டிலும் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் இந்நாட்டிற்கு வந்தனர்.

'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' என்றான் பாரதி. மீசைக்கவிஞனின் வாக்கு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.

மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றில் இன்று ஒரு பொன்னாள்; நன்னாள். பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியத் திருநாள்.

அன்பு பேராளர்களே...,

1816-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட தமிழ் கற்றல் கற்பித்தல் அணுகுமுறை வருகின்ற 2016-ஆம் ஆண்டோடு 200 ஆண்டுகள் எட்டிப்பிடிக்கவிருக்கின்றது. இந்த வரலாறு பதிவேட்டில் மட்டுமல்லாது நம் நினைவேட்டிலும் பதிக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து மலேசிய மண்ணில் தஞ்சம் புகுந்து 1000 ஆண்டுகள் ஆகின்றன என வரலாற்றுச் சான்றுகள் சான்றியம் இருக்கின்றன. கடந்த 200 ஆண்டுகளில் தமிழ் கற்றல் கற்பித்தல் ஒரு பரிணாம வளர்ச்சியை நம்மால் காணமுடிகின்றது.

நம்முடைய மாநாட்டின் நோக்கங்களான தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் புதிய செல்நெறிகளை அறிவதும், எதிர்படும் சவால்களை அடையாளம் கண்டு அதனைத் தீர்ப்பதும், பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதுமே முதன்மை நோக்கங்களாக அமைகின்றன.

மூன்று நாள் நடைபெறக்கூடிய இம்மாநாடு சீரிய சிறப்போடும் புதுப்பொலிவோடும் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் ஒற்றுமை என்கின்ற அந்த 'மை'தான்.

உதிர்ந்த இந்த 'மை' நம் செயலக நிலைமையை வளமையாக்கியது. பேராளர்களின் கட்டுரைகளைத் தின்மையாக்கியது. மொத்தத்தில் நம் மாநாட்டை செழுமையாக்க்கியது.

இந்த மூன்று நாட்களில் ஆரோக்கியமான கலந்துரையாடல்களும் விவாதங்களும் சிறப்பாக நடந்தேற உள்ளன. இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் நிச்சயமாக தமிழ் கற்றல் கற்பித்தலில் ஒரு பரிணாம வளர்ச்சியையும் நிச்சயம் ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளில் ஏற்படும் சவால்களை அவ்வப்போது ஒரு தொடர் நடவடிக்கையாக இருந்து சில திட்டங்களை வரையறுக்க இச்செயலகம் முடிவு கொண்டுள்ளது.

மாநாட்டுச் சிறப்புகள்:

* பேராளர்களின் எண்ணிக்கை ( 500க்கும் மேற்பட்டோர் )
* ஆய்வடங்கல் (60 கட்டுரைகள் இடம்பெறுகின்றன )
* நாடுகளின் பங்கேற்பு ( சிங்கப்பூர் , தமிழ் நாடு, பாண்டிச்சேரி, கனடா, மொரிசியஸ், தென்
ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, மலேசியா )

அன்பு வெளியூர் பேராளர்களே,

மலேசிய நாடு ஓர் அழகிய நாடு. இயற்கை அன்னை இயல்பாகவே வீற்றிருக்கும் ஒரு பொன்னாடு. வந்தவர்களை வாழ வைக்கவும் அரவணைக்கவும் வழிகாட்டும் திருநாடு. பல இடங்களில் நீங்கள் சுற்றிப்பார்க்கக்கூடிய தளங்கள் இருக்கின்றன.

இந்த 7-வது மாநாடு கோலாலம்பூரில் ஏற்று நடத்த பல்வேறு தரப்பினர் தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு அரனாக இருந்து புரவலராக வீற்றிருக்கும் தமிழ்த்திரு மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன். டத்தோ ஸ்ரீ யின் முழு ஆதரவு பெருமளவிலான நிதி உதவியும் நல் ஆலோசனையுமே இம்மாநாடு வெற்றி அடைய வழிவகுத்தது. அதுமட்டுமன்றி தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் குறிப்பாக அதன் நிவாகத் தலைவர் பெருமதிப்பிற்குரிய டான்ஸ்ரீ டத்தோ K.R.சோமசுந்தரம் அவர்கள் அளித்த ஆதரவு நன்றிக்குரியது; நனைவுக்குரியது.

14 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் தொடங்கிய இப்பயணம் இன்று கோலாலம்பூரில் இளைப்பாருகிறது.

உலகத் தமிழாசிரியர் மாநாடு இரண்டாவது முறையாக மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு பெருமகிழ்வடைகின்றோம். பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்கள் இங்குக் கூடியிருப்பதைக் கண்டு உள்ளம் பூரிப்பதோடு, இதுபோன்ற சந்திப்புகளும் நட்பும் தொடர வேண்டும், மேலும் இதனை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

"கைத்திறச் சித்திரங்கள்,
கணிதங்கள் வான நூற்கள்,
மெய்த்திற நூற்கள், சிற்பம்,
விஞ்ஞானம், காவியங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தகசாலை எங்கும்
புகுந்தநாள் எந்நாளொ'
-( பாரதிதாசன் )


நன்றி, வணக்கம்.

0 Comments:

Post a Comment

<< Home