.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, June 11, 2006

மலேசியாவில் உலகத் தமிழாசிரியர் மாநாடு :ஒரு கண்ணோட்டம்

ஆக்கம் : திருமிகு. எ.சகாதேவன்,
கௌரவச் செயலாளர்,7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடு.


1992-ஆம் ஆண்டு முதலாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டைச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஏற்று நடத்தியது. மாநாடு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகச் சகோதரர் வி.ஆர்.பி.மாணிக்கம் இருந்தார்.

இம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து ஐந்து பேராளர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டின் இறுதியில் இரண்டாவது மாநாட்டை மலேசியா ஏற்று நடத்த வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. சிங்கப்பூரில் மாநாட்டில் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கச் சார்பில் பேராளராகக் கலந்து கொண்ட சகோதரர் கோ.இராதாகிருஷ்ணன் அவர்களிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

1994-ஆம் ஆண்டு ஜூண் திங்கள் 9-ஆம் நாள் முதல் 12-ஆம் நாள் வரை, 'தகவல் யுகத்தில் தமிழ் கற்றல் கற்பித்தல்' எனும் கருப்பொருளில் இரண்டாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டைக் கல்வியாளர்களோடு ஆசிரியர் சங்கங்களும் முன்னின்று நடத்தின. நன்னெஞ்சர்கள் பலர் நன்கொடைகளை வழங்கி இம்மாநாட்டுச் செலவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டனர். பொதுப்பணி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களும், கல்வி அமைச்சர் டத்தோ சுலைமான் டாவுட் அவர்களும் இம்மாநாட்டுத் திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்தனர். மலேசியத் தலைமை கல்வி இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் வான் ஜாஹிட் நூர்டின் அவர்கள் மாநாட்டை அதிகார பூர்வமாக நிறைவு செய்து வைத்தார். இம்மாநாட்டின்வழி மலேசியத் தமிழாசிரியர்கள் உலக அங்கீகாரம் பெற்றனர்.

இம்மாநாட்டிற்குப் பிறகு பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்களுடன் தொடர்பு உருவானது. தமிழாசிரியர்களின் பணித்திறம் உயர்வதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டன. இதன் தொடர்பில் உலகத் தமிழாசிரியர்களின் மலேசியச் செயலகம் அமைக்கப்பட்டது. திரு.எ.சகாதேவன் மலேசிய நிகராளியாக நியமிக்கப்பட்டார்.

1996-ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டில் மூன்றாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 35 பேராளர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் மலேசியச் செயலகம் வாசிப்புத் திறன் பற்றிய ஆய்விதழ் ஒன்றனை வெளியிட்டது.

நான்காவது மாநாடு 1998-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 45 மலேசிய பேராளர்கள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டின் தொடர் நடவடிக்கையாக இணையம்வழி தமிழ்மொழி பயில்வதற்கான 'தமிழ்க்களம்' எனும் அகப்பக்கம் உருவாக்கப்பட்டது. சென்னையிலுள்ள தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்திலிருந்து இது செயல்படுகிறது. அதன் செலவுத் தொகைக்காக மலேசியச் செயலகம் 300,000 ரூபாய் உதவி நிதி வழங்கியது. ஒவ்வொரு நாKஉம் 20,000 பேர் அதன்வழி தமிழ் பயின்று வருகின்றனர்.

ஐந்தாவது மாநாடு 2000-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 60 பேராளர்கள் கலந்து கொண்டனர். ஆறாவது மாநாடு 2002-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. அம்மாநாட்டில் 15 மலேசியப் பேராளர்கள் கலந்து கொண்டனர். ஏழாவது மாநாட்டை ஸ்ரீலங்கா ஏற்று நடத்த இயலாத சூழ்நிலையில் மலேசியச் செயலகம் இப்பொறுப்பை ஏற்று தேசியப் பணியாளர் சங்கம், தேசிய தமிழாசிரியர்கள் சங்கம், தலைமையாசிரியர் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து நடதுகிறது.

உலகத் தமிழாசிரியர்கள் மாநாடுகளின் தொடர் நடவடிக்கைகளில் புதுவை மொழியியல், பண்பாட்டு மையத்திலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பல பணியிடைப் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மலேசியாவிலிருந்து நாற்பதுக்கும் அதிகமான கல்வியாளர்கள் அவற்றில் கலந்து பயன்பெற்றனர். மாநாட்டிற்கு முன்பே ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆய்வடங்கலாக வழங்கப்படுவது அரிது. ஆனால், மலேசியச் செயலகம் ஆய்வடங்கலை முன்கூட்டியே தயாரித்துப் பேராளர்களுக்கு வழங்கியுள்ளது.

இம்மாநாட்டை முன்னிட்டு மலேசியத் தமிழ்ப்பள்ளிகளைப் பற்றிய ஒரு முழுமையான வரலாற்று நூல் தயாரிப்பில் உள்ளது. தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இத்தொகுப்பு விரைவில் வெளிவரும்.

ஏறக்குறைய இருநூற்றைம்பதாயிரம் ரிங்கிட் செலவில் இம்மாநாடு நடைபெறுகிறது. டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் இம்மாநாட்டிற்கு RM 50,000 வழங்கி உதவியுள்ளார். தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கம் RM 20,000 நிதி உதவி வழங்கி உதவியுள்ளது.தமிழ் ஆர்வலர் பலர் நிதியுதவி செய்துள்ளனர். மலேசியக் கல்வி அமைச்சு 250 ஆசிரியர்களை இம்மாநாட்டுக்குத் தன் செலவில் அனுப்பி வைத்துள்ளது.

உலகத் தமிழாசிரியர் மாநாட்டை அடுத்த சுற்றிலும் மலேசியா ஏற்று இதனினும் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்குத் தமிழாசிரியர்கள் இப்பொழுதே தயாராகிவிட்டார்கள்.

எ. சகாதேவன்.
கௌரவச் செயலாளர்,
7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடு.

0 Comments:

Post a Comment

<< Home