சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள சம்பந்தம்!
டாக்டர் எம்.எஸ். உதய மூர்த்தி அவர்கள் எப்போதோ எழுதியது...(குமுதத்தில்)
சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு உறவு இருக்கிறது. அதை நாம் புரிந்து கொள்ளும் போது நாம் சொல்கிற வார்த்தை மந்திரம் போல் நிறைவேறும்.
ஒரு மனிதரிடம் பொய்யாக ஒரு வார்த்தையைத் தற்பெருமைக்காகவோ சமாதானத்திற்காகவோ சொல்கிறோம். சொல்லும் போதே நமக்குத் தெரியும் 'இதை நாம் செய்யப் போவதில்லை' என்று. இப்படிச் சொல்லிச் சொல்லி பழக்கப்படும் போது, 'சொல்லப்படுகிற வார்த்தைகளை செயல்படுத்த வேண்டியதில்லை' என்ற மனப் பழக்கத்தை நம் ஆழ்மனம் ஏற்றுக் கொள்கிறது. பிறகு ஒரு நாள் 'இதை இப்படிச் செய்வேன்' என்று சொல்லும்போது ஆழ்மனம் இதை ஏற்றுக் கொள்வதில்லை! "செய்ய வேண்டியதில்லை! நிறைவேற்றத் தேவையில்லை!" என்று பழைய பாதையில் செல்கிறது.
செய்ய வேண்டியதில்லை என்று அலட்சியப்படுத்தும் ஆழ்மனத்திற்கும் செய்து முடிக்க வேண்டும் என்ற நம் தீர்மானத்திற்கும் ஒரு போராட்டம் ஏற்படுகிறது. இதன் விளைவாக மனம் தடுமாறுகிறது.
"செய்யப் போவதைத்தான் பேசுகிறோம்" என்று ஆழ்மனம் நம்பும்போது, காரியத்தை நிறைவேற்ற ஆழ்மனம் நம்மை அறியாமல் செயல்படுகிறது. நம்மை செயல்பட உந்துகிறது. நமது இலட்சியம் நிறைவேறுகிறது.
மனத்திற்கும் செயலுக்கும் உறவில்லாதபோது மனத்தில் நம்பிக்கை இல்லை, ஈடுபாடு இல்லை. அந்த வேலையை செய்யத் தயாராயில்லை.
"செய்கிறேன்!" என்று சொல்லிவிட்டு செய்யாமலிருக்கும் போது ஆழ்மனத்தை நேர் எதிர்த் திசையிலொ அனுப்புகிறோம். நமக்குக் காரியம் ஆக வேண்டிய போதும் அது அந்த பழக்கம் காரணமாக நேர் எதிர்த் திசையில் செல்கிறது!"
சொல்லுக்கும் செயலுக்கும் உறவை ஏற்படுத்துங்கள்!
குறிப்பு : டாக்டர் எம்.எஸ்.உதய மூர்த்தி எழுதிய மனோதத்துவத் தொடர்களை பல ஆண்டுகளாக படித்து வருகின்றேன். அவருடைய முதல் புத்தகம் "எண்ணங்கள்" பலர் வாழ்வில் விளைபயன்மிக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
1 Comments:
மூர்த்தி அண்ணா சொன்னதே பெரும் கீர்த்தி என்றே கருதுகிறேன். அடடே..என்ன ஒற்றுமை..டாக்டர் எம்.எஸ்.உ.மூர்த்திக்கும் உங்களுக்கும்.....பெயரில்.
சிங்கப்பூரில் எங்கு வேலை அன்பரே? வாய்பிருந்தால் சந்திக்கலாம்!
Post a Comment
<< Home