பினாங்கில் தைப்பூசத் திருவிழா
பினாங்கு, ஜன.25
இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவைக்காண, பினாங்கு ஸ்ரீ பால தண்டாயுத பாணி ஆலயத்திற்கு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடினர். கோலாலம்பூர் - பத்துமலைக்கு அடுத்து மலேசியாவில் தைப்பூசத் திருவிழா என்றால் அது பினாங்கு மாநிலத்தில்தான் என்றால் மிகையாகாது.
முதல் நாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோவில் வீட்டில்
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஒன்று கூட, வெள்ளி ரத ஊர்வலம் புறப்பட்டது. கோவில் வீட்டிலிருந்து புறப்பட்ட வெள்ளி ரத ஊர்வலத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.
அர்ச்சனை செய்தவர்களில் இந்துக்கள் மட்டுமல்லாது சீனர்களும் அடங்குவர். வெளிநாட்டிலிருந்து வந்த சுற்றுப் பயணிகளும் தைப்பூசத் திருவிழாவைக் கண்டுகளித்தனர்.
வெள்ளி ரத ஊர்வலத்தின் போது அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் வழி நெடுகிலும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து சுவை நீர் மற்றும் அன்னதானம் வழங்கினர்.
பினாங்கு மாநிலத்திலுள்ள 'மலேசிய அறிவியல் பல்கலைக்கழக - இந்திய பணியாளர் சங்கமும் - மாணவர்களின் 'இந்திய பண்பாட்டுக் கழகமும்' இணந்து முதல் நாள் இரவு அன்னதானமும் மறுநாள் தண்ணீர் பந்தலில், சுவைநீரும் வழங்கினர்.
"ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரியான தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்து வருகிறோம்; அன்னதானமும் வழங்கி வருகிறோம். மக்கள் திரளாக வருகின்றனர்; இன்று இரவு ஏழரைக்கு அன்னதானம் தொடங்கினோம் - பதினொன்றரை வரை மக்கள் வரிசைப்பிடித்து நின்று உணவருந்திச் சென்றனர் " என்று இந்திய பணியாளர் சங்கத் தலைவர் திரு. முனியாண்டி அவர்கள் கருத்துரைத்தார். " பல்கலைக்கழக இந்து மாணவர்கள் பலர் மக்களுக்கு அன்னதானம் மற்றும் சுவைநீர் வழங்க உதவி புரிந்தனர் " என்று அவர் மேலும் தெரிவித்தார்.
" இவ்வாண்டு பினாங்கு தைப்பூசத்தில் கலந்து கொண்ட PMR, SPM & STPM மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கி சிறப்பு செய்த - சக பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இம்மாதிரியான புறப்பாட நடவடிக்கை,
குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு நல்ல அனுபவத்தையும் தலைமைத்துவத்தையும்
ஏற்படுத்துகின்றது!" என்று USM தண்ணீர் பந்தல் மாணவர் குழுத் தலைவர் சகோதரர் - பழனி உற்சாகத்துடன் கருத்துரைத்தார்.
பொது மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு பினாங்கில் போலீசார் தீவிர பாதுகாப்பில் இருந்தனர்.
0 Comments:
Post a Comment
<< Home