.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Wednesday, October 25, 2006

குழந்தைக் கவிஞர்- அழ.வள்ளியப்பா

திரு அழ.வள்ளியப்பா எனும் கவிஞரைப் பற்றி முழுமையாக அறியும் முன்னே அவர் எழுதிய சிறுவர்களுக்கான கவிதைகளைப் படித்திருக்கிறேன். தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு ( 12 வயது ) இறுதியில் என்னைத் 'தலைச்சிறந்த மாணவன்' என்று தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினார்கள். எனக்குக் கிடைத்த பரிசு - 'மலரும் உள்ளம்' எனும் சிறார் கவிதைப் புத்தகம். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள்தான் எழுதியிருந்தார்.

கவிஞரின் நடை; இனிய சொற்கள்; உயர்ந்த கருத்துக்கள் இவையாவும் அவரது படைப்புகளில் காணலாம்.

இயல்பாகவே அவரது கவிதைகளைப் படிக்கும் சிறுவர்கள் கவிநயத்தில் அல்லது சந்தச் சொற்களில் ஈர்க்கப்படுவர். குழந்தைகளின் வயதையும், அவர்களது மனப் போக்கையும் நன்கு அறிந்தவர்களால் மட்டுமே குழந்தைகளுக்கான கவிதையைப் புனைய முடியும்! திரு. வள்ளியப்பா அவர்களுக்கு இக்கலை கைவந்தது என்றால் மிகையாகாது.

சொல்லப்போனால், கவிஞரின் குழந்தை உள்ளத்தில் மலர்ந்தவை அவரது கவிதைகள். இவற்றில் இயற்கையின் அழகைக் காட்டுகிறார்; நன்னெறிப் பண்புகளைப் புகட்டுகின்றார்; உயிர்களிடத்தில் அன்பு வைக்கும்படி கூறுகிறார். அதோடு மாத்திரமல்லாமல் மேலான உயர்ந்த எண்ணங்களைக் குழந்தைகளின் மனத்திலே ஆழமாகப் பதிய வைத்து விடுகிறார்.

'உலக வாழ்விற்கு அன்பு இன்றியமையாதது என்னும் உண்மையைப் பலவாறாகப் பாடியுள்ளனர்'. இவ்வுண்மையைக் குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் கவிதை இயற்றியுள்ளார் இக்கவிஞர். சிறுபிள்ளைகள் பார்த்து அறிந்த நகைகளையும், மலர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு படுத்தி இறுதியாக, அன்பின் நலன்களைக் கூறுகிறார்:

பட்டை போடப் போடத்தான்
பளப ளக்கும் வைரமே;
மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினுமி னுக்கும் தங்கமே;
அரும்பு விரிய விரியத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே;
அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே!

இன்றை நாளில் உலக மக்களை அல்லற்படுத்தும் (அணு ஆயுத) போர் முதலிய பல்வேறு நாச வேலைகள் ஒழிந்து, அமைதி நிலவ வேண்டுமென்றால் 'அன்பு' என்னும் மக்கட் பண்பு இவ்வுலகில் பெருக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கவிஞர். இன்றைய சூழலுக்கும் வெகுவாய்ப் பொருந்துகிறது பாருங்கள்!

நன்றி "மலரும் உள்ளம்" -குழந்தைப் பாடல்கள், ஒன்பதாம் பதிப்பு: செப்,1975

0 Comments:

Post a Comment

<< Home