.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Friday, January 04, 2008

இன்பத் தமிழ் அமுது

தமிழ்க்கூறு நல்லுல்கில் தமிழ்மக்களால் புரட்சிக்கவி என்றழைக்கப்படும் பாரதிதாசனால் இன்தமிழ், 'இன்பத் தமிழ்' எனும் கவிதை இயற்றப்பட்டது. தமிழைப்பற்றி இவர் வடித்த கவிதைகளில் இஃது மிகவும் பிரபலமாவதற்கு ஊடகம் முக்கியப்பங்காற்றியுள்ளது என்றால் மிகையாகாது. அவர் இயற்றிய அக்கவிதையின் விளக்கத்தைக் காண்போமா?

அமுதம் இனிமை மிக்கது; உண்டவரை நெடு நாள் சிறப்புற்று வாழ வைக்கும் தன்மையை உடையது. தமிழும் கற்பவருக்கு அத்தகைய நன்மைகளைப் பயக்கும் என்பதால் அமுது என அழைக்கப்படுகிறது. இனிமை மிக்க தமிழ், அம்மொழியைப் பேசும் தமிழர்களுக்கு உயிருக்குச் சமமானதாகும். நிலவின் குளிர்ச்சியான ஒளி உடலுக்கு இதமளிப்பதைப் போன்று, கற்போரின் உள்ளத்திற்குத் தமிழ் இதமாக இருப்பதால், அத்தமிழ் நிலவென அழைக்கப்படுகிறது.

இனிமை மிக்க தமிழ்,சமுதாயம் எனும் பயிர் விளைவதற்கு ( முன்னேற்றத்திற்கு ) நீர் போன்றதாகும். தமிழ்மணம் எனவும் அழைக்கப்படுகிறது. அதுவே தமிழர்களின் வாழ்வை உறுதி செய்யத்தக்க ஊருக்குச் சமமாகும். தமிழைக் கற்போர் அதன் ஆற்றலால் சொக்கி, இன்ப மயக்கம் அடைவதால், அத்தமிழை மது என அழைக்கிறோம். இன்பம் தரும் தமிழ் எங்களுடைய உரிமை எனும் செழிப்பான பயிருக்கு வேர் போன்று அவசியம் மிக்க ஒன்றாக விளங்குகிறது.

தமிழ், எங்கள் சமுதாயம் என்றும் இளமை குன்றாது துடிப்போடு செயல்பட ஆற்றலை வழங்கும் பாலுக்குச் சமமானது. இனிமை மிக்க தமிழ் சிறப்புற்று விளங்கும் புலவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஆயுதமாக விளங்குகிறது. வானத்திற்கு எல்லை இல்லை. அது போல எல்லை இல்லா அளவிற்கு நாங்கள் முன்னேற்றமடைய தமிழ் அடிப்படையாக விளங்குகிறது. இனிமை மிக்க தமிழ் எங்கள் சோர்வைப் போக்கி புதுத்தெம்பை அளித்திடும் தேன் போன்றதாகும். தமிழராகப் பிறந்த எங்களுக்குத் தமிழ், தாயாக விளங்குகிறது. இன்பத்தமிழ் செம்மை மிக்க எங்கள் மனங்களின் ஆற்றல் மிக்க சக்தியாக விளங்குகிறது.

இவ்வாறு வரிக்கு வரி தமிழ்ச்சுவையைத் தெளித்துள்ளார் புரட்சிக்கவி பாரதிதாசன். இதோ அந்த அமுத வரிகள்....

தமிழுக்கும் அமுதென்றுபேர் ! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்குநேர் !
தமிழுக்கு நிலவென்றுபேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்குநீர் !
தமிழுக்கு மணமென்றுபேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர் !
தமிழுக்கு மதுவென்றுபேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்குவேர் !
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்குவேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்ததேன் !
தமிழ் எங்கள் பிறவிக்குத்தாய் ! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

- பாரதிதாசன்.

Saturday, December 08, 2007

ஆண்டவர்கள் கண்ட சுவர்ணபூமி - பகுதி 2


( குறிப்பு: இக்கட்டுரை மலேசியாவில் 'விடியல்' வாரப்பத்திரிக்கையில் வெளியீடு கண்டுள்ளது. கட்டுரையாசிரியர் : சரஸ்வதி கந்தசாமி )



பகுதி - 2 ( நிறைவு)

ஏறத்தாழ 6ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டது. மதப்பிச்சாரங்கள் வழி இஸ்லாம் உலக நாடு முழுவதும் பரப்பப்பட்டது. அது இந்தியாவிலும் பரவியது. இந்தியாவிலிருந்து வந்த மதப்பிரச்சாரர்கள் கிழக்கிந்திய நாடுகளில் இஸ்லாத்தை பரப்பினர். இதில் ஷேக் அப்துல்லா என்பவரின் மிகவும் கனிவான தொனியும் அவரது பேச்சாற்றலும் இங்குள்ளவர்களை மிகவும் எளிதில் கவர்ந்தது.

மாறனின் பேரனின் பேரனான, பிரான் மகா வாசன் தனது அரண்மனையில் நடந்த அவரது மதப் பிரச்சாரத்தில் மிகவும் கவர்ந்து, உடனே மதம் மாறினார். தனது பெயரை முஷபர் ஷா என்றும் மாற்றிக் கொண்டு இம் மண்ணின் முதல் இஸ்லாமிய சுல்தான் ஆனார்.'

அவரது மத மாற்றத்திற்கு பிறகு,இந்த பகுதி மக்கள் அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று அவர்களும் இஸ்லாம் மதத்தை தழுவினர். இதன் வழி வட பகுதியில் இந்து சாம்ராஜ்யம் முடிவுற்றது, சுல்தான்கள் முறை தோற்றுவிக்கப்பட்டது. மேலும் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சயாம்காரர்கள் அனைவரும் காலம் காலமாக ஏற்பட்ட கலப்பு திருணத்தின் மூலம் வந்த வழித் தோன்றல்கள்தான். அவரகள்தான் இன்றைய வட மாநிலத்து பெரும்பான்மையும் மக்களாகவும் இருக்கின்றனர்.

தென் மாநிலங்களில் ஸ்ரீ விஜயா என்ற பல மிக்க சாம்ராஜ்யம் ஒன்று இருந்து வந்தது. 700 ஆண்டுகள் ஸ்ரீ விஜயா மன்னர்கள் மலேசிய நிலப்பரப்பை ஆண்டுள்ளனர். பிறகு பற்பல காரணங்களினால், அவர்கள் பலமிழக்க நேரிட்டது. இந்தக் காலகட்டங்களில், அதிக எண்ணிக்கையில் வந்த பூகீஸ்காரர்கள் ஜோகூர் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் குடியேறினர். இவர்கள் ஆங்காங்கே வாழ்ந்த மக்களுடன் கலந்து அந்த மாநிலங்களிலும் புதிய ஆட்சி முறையை தோற்றுவித்தனர்.

14ஆம் நூற்றாண்டில் மலாக்காவை ஸ்ரீ விஜயா சாம்ராஜ்யத்தின் இளவரசர் பரமேஸ்வரா நிறுவினார். இவரது மகன் ஒரு பாரசீகப் பெண்ணை திருமணம் செய்து இஸ்லாம் மதத்தை தழுவினர். தனது பெயரையும் ராஜா இஸ்கண்டர் ஷா என்று மாற்றிக்கொண்டார்.மன்னர்களின் மதமாற்றத்தினாலும் இந்தோனேசியா மக்களின் ஆக்ரமிப்பினாலும் இந்து சாம்ராஜ்யங்கள் இம்மலேசிய மண்ணில் படிப்படியாக முடிவுக்கு வந்தன. ஆனால் இங்கே உள்ள மக்களில் பெரும் பகுதியினர் இந்திய வம்சாவளியினரின் கலப்பு வழித்தோன்றல்கள் என்பதுதான் பூர்வீக நிஜம்.

என்வே, இந்தியர்கள் ஒரு காலத்தில் இப்பிராந்தியத்தை ஆண்ட பரம்பரை. 3000 ஆண்டுகளாக நாகரிகம், வாழ்க்கை நடைமுறை, நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, நகர நிர்மாணிப்பு, வியாபாரம், உலக வாணிபம், அரசியல்,கலை, கலாச்சாரம் என்ற வாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் கற்றுக் கொடுத்தவர்கள். ஒரு பரிணாம வளர்ச்சியையும் ஒரு அரசியல் அமைப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள்.

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை என்று நமது இன்றைய அரசியல் தலைவர்கள், பேச்சாளர்கள் கூறுவதில் சரித்திர உண்மை பொதிந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு பின் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில், கடின உழைப்பு, விசுவாசமிக்க தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் ஆயிரமாயிரம் தென்னிந்திய தொழிலாளர்கள் இம்மண்ணிற்கு கொண்டுவரப்பட்டனர். இவர்கள் தான் இன்று இந்திய வம்சாவளியினர் என்று தனித்து கூறப்படுகிறது.

3000 ஆண்டிகளுக்கும் முன் வந்த இந்திய வர்த்தகர்கள் எப்படி இந்த மலேசிய மண்ணிற்கு ஒரு அடையாளத்தை பாரம்பரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தனரோ, அதே போல் கடந்த நூற்றாண்டுகளில் சஞ்சிக்கூலிகளாக தருவிக்கப்பட்ட தென்னிந்திய தொழிலாளர்கள் தங்கள் அயராத உழைப்பின் வழி மலேசியாவின் பொருளாதாரத்திற்கு அஸ்திவாரம் அமைத்துக் கொட்டுத்தனர்.

இந்த மண்ணிலே இந்திய சமுதாயத்திற்கு ஒரு தொன்மையான சரித்திரம் இருக்கிறது. மரியாதைக்குரிய ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நாம் வடித்த வியர்வை இருக்கிறது. நாம் போட்ட உழைப்பு இருக்கிறது. இருந்தும், இந்த சமுதாயம் தெருவுக்கு வந்தது ஏன் ?


- நன்றி : சரஸ்வதி கந்தசாமி, 'விடியல்' ( 5.12.2007-11.12.2007)


===================== முற்றும் ==========================

Friday, December 07, 2007

ஆண்டவர்கள் கண்ட சுவர்ணபூமி




( குறிப்பு: இக்கட்டுரை மலேசியாவில் 'விடியல்' வாரப்பத்திரிக்கையில் வெளியீடு கண்டுள்ளது. கட்டுரையாசிரியர் : சரஸ்வதி கந்தசாமி )

பகுதி : 1

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் ஆட்சியியாளர்களின் காலத்தில் வெறும் சஞ்சிக்கூலிகளாக கொண்டுவரப்பட்டதினால் தான் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே மக்கள் தொடர்பு ஏற்பட்டது என்ற ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. இது அழிக்கப்பட வேண்டும்.

சுமார் 3000 வருடங்களுக்கு முன்னரே தமிழ் வர்த்தகர்கள் அலெக்ஸாண்டியா, ரோமாபுரி, கிரேக்கம் முதலிய மேற்கத்திய நாடுகளுடன் வாணிபம் புரிந்தனர். கிழக்கே சீனா மற்றும் இதர நாடுகளுடனும் வாணிபம் நடத்தி வந்தனர். இந்திய நாட்டிலிருந்து வாசனைத் திரவியங்கள், துணிமணிகள், முத்து, வைரம், தேக்கு, அரிசி, யானைத்தந்தம் ஆகிய பொருட்களை முக்கிய ஏற்றுமதி பொருட்களாக கொண்டு சென்றனர். இதனால் தமிழ்மொழி-சமஸ்கிருத வார்த்தைகள் மற்ற மொழிகளில் கலந்தொலிக்கின்றன. உதாரணத்திற்கு அரிசி என்ற சொல் கிரேக்க மொழியில் 'ஒரைசா' என்றும் ஆங்கிலத்தில் 'ரைஸ்' என்றும், இஞ்சி வேர் என்ற தமிழ்ப்பதம் கிரேக்க மொழியில் 'ஜின்ஜிவா' என்றும் ஆங்கிலத்தில் 'ஜிஞ்ஜர்' என்றும் மருவி வழ்ங்கப்படுகிறது. மலாய் மொழியின் சொல்வளத்திற்கும், தமிழ்-சமஸ்கிருதம் பெரும் பங்காற்றியுள்ளன என்பதும் நாம் அறிந்ததுதான்.

வெகுகாலமாக இந்தியாவிலிருந்து சீனா மற்றும் அதைச்சுற்றியுள்ள பிரதேசங்களுக்குச் சென்று கொண்டிருந்த கப்பல்கள் மலாக்கா ஜலசந்தியைப் பயன்படுத்தின. இதனால் மலாக்கா ஜலசந்தியின்(நீரிணை) இரு கரைகளிலும் இந்திய வர்த்தகர்கள் பண்டக சாலைகள் உருவாக்கினர். பிறகு இந்த பண்டக சாலைகள் துறைமுகமாக உருவகம் பெற்றன. அதனால் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மலாக்கா, சிங்கப்பூர், கெடா, சயாம் ( தாய்லாந்து ) போன்ற கடல்புற இடங்களில் இந்தியர்களின் குடியிருப்புகள் ஏற்பட்டன. இந்த குடியேற்றப் பகுதிக்கு இந்திய நாட்டிலிருந்து போர்வீரர்கள், புரோகிதர்கள், சிற்பிகள் என வந்து சேர்ந்தனர். இவர்களின் மூலம் இந்திய பழக்க வழக்கங்கள், அரசியல்முறை, சமயக் கோட்பாடுகள் இங்கே பரவின. மீன் பிடித்து, வேட்டையாடி, பரண் மீது குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வந்த அக்கால மக்களுக்கு, இந்தியர்கள் முதன் முதலில் நாகரிக வாழ்க்கை முறைகளை கற்றுக் கொடுத்தனர். மேலும் பயிரிடுதல், நீர்ப்பாசனம் செய்தல், நெசவு செய்தல், வியாபார முறைகள், நாணயத்தின் உபயோகம், வீடு கட்டுதல்,வைத்திய சாஸ்திரங்கள் போன்றவற்றையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

ஆகவே நமது முன்னோர்கள் இம்மண்ணில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும், வாணிபம், அரசியல், கலாச்சாரம், வாழ்க்கைமுறை போன்றவற்றை கற்றுக் கொடுத்தனர் என்பதை முதலில் நாம் புரிந்து பெருமைப்பட வேண்டும்.

எனவே, இந்தியர்கள் நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்கள் என்ற பொய்யான தோற்றம் முதலில் அழிக்கப்பட வேண்டும். இம்மண்ணின் வளப்பதிற்கு இந்தியர்களின் பங்கு கடந்த இரண்டு நூற்றாண்டுகள் தான் என்ற மாயை நிராகரிக்கப்பட வேண்டும்.

மலேசியா அமைவதற்கும் முன், மலேயா உருவாவதற்கும் முன், பிரிட்டிஷ் மற்றும் போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் மலேயாவை ஆளுவதற்கும் முன், இஸ்லாம் இந்நாட்டிற்கு வருவதற்கும் முன், இஸ்லாம்,கிறுஸ்துவ மதம் தோன்றுவதற்கும் முன், கால் பதித்து, வாணிப வாய்ப்புக்கள் ஏற்படுத்தி ஆட்சிமுறை அமைத்து, துறைமுகப் பட்டினங்களை உருவாக்கி, உலக நாடுகளுடனான வாணிபத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்நாட்டை வளப்படுத்தி உலக வரைபடத்தில் மலேசியா-சிங்கப்பூருக்கு முதல் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் இந்தியர்கள். இம் மண்ணிற்கு முதன் முதலில் "சுவர்ணபூமி" என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தவர்களும் இந்தியர்கள்தான், அதுவும் தென்னிந்தியர்கள்தான் என்ற பெருமையும் நமக்குள்ளது.

பண்டைக் காலத்திலேயே, தென் இந்தியாவின் கிழக்கு மலைத்தொடரை சார்ந்த பிரதேசங்களில் இருந்து வந்த தமிழர்கள் மலேசியா உட்பட அநேக கிழக்கிந்திய நாடுகளில் ராஜியங்கள் அமைத்து முழு வல்லமையுடன் ஆட்சி புரிந்தனர் என்பது சரித்திரம். அக்காலத்தில் இம்மண்னில் சிறுபான்மையாக இருந்த சுயகுடியினருக்கு முதன் முதலின் நாகரிகம் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் தான் என்று பழைய சரித்திர நூல்கள் கூறுகின்றன.

கொந்தளிப்பான வங்காள வளைகுடாவை கடந்த பின்னர் இந்திய கப்பல்களுக்கு ஏற்ற இடமாக கெடாவில் உள்ள குனோங் ஜெராய் மற்றும் சற்று தெற்கே உள்ள சுங்கை பூஜாங் ஆகிய பிரதேசங்கள் நீர்வளம் மற்றும் நிலவளம் பொருந்தியவையாக இருந்ததால் இந்தியர்களின் முதல் குடியேற்றமும் அதைத் தொடர்ந்து இம் மண்ணில் முதல் சாம்ராஜ்யமும் அங்கேயே தோன்றியது. பூஜாங் நதிக்கரையில் முதல் பட்டினம் உருவானது. அதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் அடுத்தடுத்து பல குடியிருப்பு பகுதிகள் உருவாயின. அந்த குடியிருப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு அந்த இந்துராஜ்யம் விரிவாக்கப்பட்டது. அது சயாமின் தென் பகுதி, பெர்லிஸ், கெடா,பட்டவொர்த் ஆகிய பகுதிகளுக்கு விரிந்து பரவி இருந்தது.

இம் மண்ணின் அந்த முதல் இந்து சாம்ராஜ்யத்தை 'தர்மராஜா' என்றழைக்கப்பட்ட மாறன் மகாவம்சன் ஆட்சி புரிந்தார். அதுதான் 'லங்காசுகா' என்ற முதல் இந்து சாம்ராஜ்யம். அரசர் மாறன், தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் ஒரு கோட்டையைக் கட்டி, ராஜாங்கத்தில் பல இலாக்காக்களை ஏற்படுத்தினார். நிர்வாகத்தில் சுய குடிகளையும் இந்தியாவிலிருந்து வந்த ஆட்களையும் நியமித்து நல்லாட்சி புரிந்தார். பள்ளிக்கூடங்களை நிறுவினார். முக்கியமாக சிவன் கோவில் கட்டி மக்களிடையே சமயப் பற்றை வளர்த்தார். இங்கே மீன்பிடித்து, வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வந்த மலாய் சமூகத்தினருக்கு ஆட்சியில் பணி புரியவும் இடமளித்தார்.

பேரரசர் மாறனின் மூத்த மகன் வடக்கே அயோத்தியா ( சயாம் ) என்ற சாம்ராஜ்யத்தை நிறுவி ஆட்சி புரிந்தான். இரண்டாவது மகன் தெற்கே கங்கா நகரம் (பேராக்) என்ற ஒரு ராஜ்யத்தை ஆண்டு வந்தான். மாறனின் அழகும் அறிவுமிக்க மகள், கிழக்கே பத்தினி ( பட்டாணி ) என்ற சாம்ராஜ்யத்தை அமைத்து ஆண்டு வந்தாள்.


.................( தொடரும் ).............................................................................................................................


Thursday, December 06, 2007

யார்தான் சாட்சி?

அங்கே யாருமில்லை சாட்சியாக
மனம்தான் கேள்வியாக
எனக்குள்ளே ஒருவன் நீதி தேவன்
கூண்டிலேற்றினான் குற்றவாளியாக!

- நன்றி - டார்டர் எம்.எஸ்.உ " உலகால் அறியப் படாத ரகசியம்" பக்.24

Thursday, July 05, 2007

மலேசியாவில் புகைமூட்டம்!

படம்: நேற்று காலை 10.00 , அலோர் ஸ்டார்

கடந்த சில நாட்களாகவே இங்கு பெரும்பாலான இடங்களில் சுற்றுச் சூழல் மாசுபட்டிருக்கிறது! சில இடங்களில் சுகாதாரக் கேடு ஏற்படக்கூடிய அளவிற்கு 'காற்று மாசு கணக்கீடு' - Air Pollutant Index (API)அடைந்துள்ளது பலரை வேதனையடையச் செய்துள்ளது.


வடக்கில், கெடா மாநிலத்தில் - சுங்கை பட்டானியில்லும் பினாங்கு மாநிலத்திலும் API அளவு, நேற்று அதிகரித்துள்ளது.


நேற்று வரை சுங்கை பட்டானியில் API அளவு 62 -ல் இருந்து 104-ஐ எட்டியுள்ளது. அலோர் ஸ்டாரில் 51-ல் இருந்து 62க்கு அதிகரித்துள்ளது.


கடந்த செவ்வாய் அன்று லங்காவியில் API கணக்கீடு 55 -ஆக இருந்து நேற்று 61-ஐ எட்டியுள்ளது.


பெர்லிஸ் மாநிலத்திலும் காற்று சுற்றுச் சூழல் மாசுபட்டிருக்கிறது. அங்கு செவ்வாய்க் கிழமை API - 51-ல் இருந்து 54க்கு ஏற்றம் கண்டுள்ளது.


நேற்று காலை மணி 11 வரை பினாங்கு மாநிலத்தில், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம், பிறை மற்றும் செபெராங் ஜெயா ஆகிய இடங்களில் API அளவு முறையே - 65, 74 மற்றும் 91 ஆக இருந்தது.


ஒவ்வொரு முறையும் 'காற்று - சுற்றுச் சூழல் மாசு' ஏற்படும்போது பல காரணங்கள் கூறப்பட்டாலும் ( உதாரணத்திற்கு - இந்தோனேசியா காட்டில் பற்றவைக்கப்படும் தீ ) இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படாதது மக்களை வேதனையடையச் செய்துள்ளது.