.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, September 17, 2006

சீடன் தயாராக இருக்கும்போது குரு தோன்றுவார்!

கடந்த வாரம் பத்து பகாட்டில் வாழும் விரிவுரைஞர் உயர்திரு.மோகன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் பினாங்கு மாநிலத்துக்கு மேற்கல்விக்காக சென்றது முதல் அவரின் தொடர்பு தற்காலிகமாக இல்லாமல் இருந்தது. அவர் பத்து பகாட் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்.

அன்றைய சந்திப்பு அசாதாரணமானது. வழமையாக பொதுவான பணி, சமூக ஈடுபாடு, தொழில் நுட்பம் என்ற வட்டத்தைத் தாண்டி 'ஆன்மீகம்' எங்கள் உரையாடலில் முக்கிய விசயமாக இருந்தது. அவர் சில மாதங்களுக்கு முன்பு இந்தையாவுக்குச் சென்றதாகவும். அங்கு அவர் 'ஆன்மீகப் பயணம்' மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார். தெய்வாதீனமாக, அவரின் குருவுடன் சுமார் ஒரு மாத காலம் பயணித்த ஆன்மீக விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். குரு என்றேன் அல்லவா? அவர் வேறு யாருமல்ல. இப்போது இந்திய நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் 'வாழ்வியல் கருத்தரங்குகளை' தீர்கத்துடன் உபதேசித்து வருகின்ற சுவாமிஜி - பரமஹம்ச ஸ்ரீநித்யானந்தர் அவர்கள்தான்.

நான் சுவாமிஜி - பரமஹம்ச ஸ்ரீநித்யானந்தர் பற்றி அச்சு ஊடகங்கள் வழிதான் கேள்வி பட்டிருக்கிறேன். அவர் 'குமுதம்' இதழில் எழுதி வரும் 'மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்' எனும் ஆன்மீகக் கட்டுரைத் தொடர் படித்திருக்கிறேன். அவ்வளவே. விரிவுரைஞர் திரு.மோகன் அவர்கள் 'குரு'வைப் பற்றி சிலாகித்துப் பெசிக்கொண்டிருந்தார். நிச்சயமாக குருவை நேரில் சந்தித்து ஆன்மீக உரையைக் கேட்கும் பாக்கியம் சிலருக்கே அமைவதுண்டு. 'சீடன் தயாராக இருக்கும்போது குரு தோன்றுவார்' எனும் வாசகம் என்றும் பொய்த்ததில்லை!

மறுநாள் பள்ளியில் சக ஆசிரியர் நண்பர் - அறைக்கு அலுவல் காரணமாக சென்றபோது அவர் மேசையில் இருந்த ஒரு 'சீடி' கண்ணில் பட்டது. எட்டுத்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம் - பரமஹம்ச ஸ்ரீநித்யானந்தரின் 'வாழ்வியல் போதனைத் தொடர்தான் அது. 'இது audio CDயா? video CDயா?" என்று நண்பரிடன் கேட்டேன். "VCD" என்று பதிலளித்தார்.

என் கேள்வியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டார் போலும். "வேண்டுமென்றால் எடுத்துச் செல்லுங்கள்" என்று புன்னகைத்தார்.
மகிழ்ச்சியுடன் 'நன்றி' தெரிவித்து இரவல் வாங்கி வந்தேன்.

(தொடருவேன்)