.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Wednesday, May 17, 2006

தமிழ்ப்பள்ளிகளின் தேசிய நடவடிக்கை மன்றம்



தமிழ்ப்பள்ளிகளின் தேசிய நடவடிக்கை மன்றம் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களால் 2000ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.இம்மன்றத்தின் தலைவராக பேராசிரியர் டத்தோ டாகடர் த.மாரிமுத்து பொறுப்பேற்றுள்ளார்.சமூக வியூக அறவாரியம் இம்மன்றத்தின் செயலகமாகச் செயல்பட்டு வருகிறது.

கல்வி அமைச்சின் பிரதிநிகள், மாநில நிலையிலான தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர்கள், தமிழ்மொழி பிரிவின் துணை இயக்குநர்கள், மாநில நிலையிலான தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற தலைவர்கள், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை விரிவுரையாளர்கள், மலாயா தமிழ் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் இம்மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதும், தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கான செயல் திட்டங்களை அமல்படுத்துவதும், தமிழ்ப்பள்ளிகளின் தேசிய நடவடிக்கை மன்றத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நோக்கத்தை அடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் தலைமைத்துவத் திறனை உயர்த்துவதற்கும் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விவாதிப்பதும் இப்பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

இதைத் தவிர, 2000ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து,ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் பெறப்பட்ட விவரங்களைக் கொண்டு, " 21ம் நூற்றாண்டிற்கான தமிழ்ப்பள்ளிகளின் செயல் திட்டம்" வரையப்பட்டு முன்னால் கல்வி அமைச்சர் டான் ஸ்ரீ மூசா முகமட் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி நிலையை உயர்த்துவதற்கு, யூ.பி.எஸ்.ஆர் பயிற்சி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. 7 பாடங்கள் அடங்கிய 15,000 பிரதிகள் அச்சிடப்பட்டு 2003 மற்றும் 2004 இல் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Tuesday, May 16, 2006

ஆசிரியர்களே..! வாழ்த்துகள்..!


ஆசிரியர்களே..! வாழ்த்துகள்..!

ஆசிரியர்களே
அன்பிற்குரியவர்களே
ஆசானாக அனைத்தும்
கற்பித்தவர்களே

நிலையான வாழ்வு
கல்வி அன்றி இல்லை
நீங்கள் அன்றி
உலகில் நிபுணர்கள் இல்லை

தன்னலமில்லா
உழைப்பின்
தகைமையாளர்களே

தனிமனிதனுக்கு
தகுதியைத்
தந்தவர்களே

எழுத்தறிவித்ததினால்
இறைவன் என
அழக்கப்படுபவர்களே

பகுத்தறிவு
பாசறைகளே
பண்பாளர்களே

நன்மை எது?
தீமை எதுவென
நயம்பட உரைத்தவர்களே

நல்வழியே
காட்டியவர்களே;
நற்சீலர்களே

ஆசிரியர் தினத்தில்
எனது அன்பு
வாழ்த்துகள்

ஆசிரியர் பணியை
அகிலம் புகழ
தொடருங்கள்...

( ஆக்கம்: மாண்புமிகு டத்தோஸ்ரீ ச.சாமிவேலு, மலேசிய பொதுப்பணி அமைச்சர்)
பி.கு:மலேசியாவில் ஓவ்வொரு ஆண்டும் ஜூன்,16 ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.