.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, July 25, 2004

வாழ்க்கை பற்றிய சிந்தனை முத்துக்கள் !

வாழ்க்கை ஒரு சொர்க்கம் அதில் காலடி பதியுங்கள்
வாழ்க்கை ஒரு பள்ளி அதில் கல்வி பயிலுங்கள்
வாழ்க்கை ஒரு காதல் அதை அனுபவியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு பாடல் அதைப் பாடிவிடுங்கள்
வாழ்க்கை ஒரு வனப்பு அதன் புகழ் பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சவால் அதை சமாளியுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசம் அதில் துணிவு காட்டுங்கள்
வாழ்க்கை ஒரு கடமை அதை செய்து முடியுங்கள்
வாழ்க்கை ஒரு வாய்ப்பு அதைப் பயன்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு வழிகாட்டி அதைப் பின்பற்றுங்கள்
வாழ்க்கை ஒரு பயணம் அதை தொடருங்கள்
வாழ்க்கை ஒரு வாக்குறுதி அதைக் காப்பாற்றுங்கள்
வாழ்க்கை ஒரு தெய்வீகம் அதைப் புரிந்துகொள்ளுங்கள்
 
பி.கு :வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்!      
             வானம் வரைக்கும் யோசிப்போம்!

Monday, July 19, 2004

நல்லாசிரியருக்குரிய குணநலன்கள்!

நல்லாசிரியர் என்று யாரைக் குறிக்கிறோம்? சமூகத்தில் இயல்பாகவே ஆசிரியர்களுக்கு தனி மதிப்பு உண்டு. ஆசிரியர் நல்லாசிரியர் ஆகும் போது சிறப்புமதிப்பு வழங்கப்படுகிறது. முதலில் வழங்குபவர்கள் மாணாக்கர்களே மாணவர்களின் வழிபெற்றோர்களுக்கும் தெரிய வரும்போது நல்லாசிரியர்களின் நன்மதிப்பு சமூக அங்கீகாரம்பெற்று விடுகின்றது.

சரி, நல்லாசிரியருக்குறிய குணநலன்கள் எப்படி இருக்க வேண்டும் ?

முதலில், அவர் மாணவர் நலனுக்காகப் பாடுபடுபவராயிருத்தல் வேண்டும். வகுப்பறையின்உள்ளேயும் வெளியேயும் மாணவர்களுக்கு எவை நன்மை பயக்கும் விசயங்கள் என்று தீர்மாணித்து அதற்காகப் போராடுபவரே நல்லாசிரியர் தகுதிக்கு உரியவவர் ஆவார். ஆசிரியரின் எந்த முடிவும் மாணவர்களிடன் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை விழிப்புணர்ந்துமிகச் சரியான, மாணவர்களின் உயர்வுக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கும் தீர்க்கச் சிந்தனை படைத்தவராயிருத்தல் வேண்டும். நல்லாசிரியர் இயல்பாகவே தன்னலமற்றவராவார். அவர்எப்போதுமே மாணவர்களுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்.

இரண்டாவது, நல்லாசிரியர் என்பவர் மற்றவரை மதிக்கும் நற்பண்பு உடையவர். அவர்கள்தங்கள் வகுப்பு மாணவர்களை மதிக்கிறார்கள்;
வகுப்பறையில் மாணவர்களின் செயலூக்கங்களையும் நிர்வாகத்தையும் மதிக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களையும், சமூக அங்கத்தினரையும்மதிக்கிறார்கள். கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு உரிய தரத்தை சுயமதிப்பிட்டு தங்கள் துறையில் நிபுணத்துவம் பெறுகிறார்கள்.

மூன்றாவது யாதெனில், நல்லாசிரியர் தொடர்ந்து கற்கிறார். பொதுவாக தம்மைச் சுற்றி நடைபெறும்அனைத்துத் துறைகளிலும் ஓரளவு விசயஞானம் பெற்றவராயிருக்கிறார். அவர் தொடர்ந்து தம் துறையைச்சார்ந்த நூலகளை வாசித்து காலத்துக்கேற்பத் தயார்நிலையில் இருக்கிறார். அறிவுசார்ந்த விசயங்களில்ஆழ்ந்த ஈடுபாடு காட்டுகிறார்.

நான்காவது, நல்லாசிரியர் ஒரு நல்ல உரையாளராகவும் திகழ்கிறார். ஒரு கருத்தை சபையறிந்து நன்கு விளக்கும்ஆற்றல் மிக்கவராவார். அதே சமயத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களையும் நன்கு கேட்கிறார். மாணவராகட்டும் பெற்றோராகட்டும் அவர்கள் சொல்வதை நன்கு உள்வாங்கிக் கொள்கிறார். பிறகு சமயோசித உத்தியில் பிரச்னைகளுக்குவழி காண்கிறார்.

இறுதியாக, கற்றல் தொடர்ந்து நிகழ மாணவர்களே பொறுப்பேற்க வேண்டும் எந்தனை வலியுறுத்துகிறார்.நல்லாசிரியர், மாணவர்களின் 'கற்றல் நோக்கங்கள் ' அடைவதற்கு அவர்களுடன் இணைந்தே செயல் திட்டங்கள்வகுக்கிறார். அவற்றை விவேகமான முறையில் செயல்படுத்தி 'கற்றல் இலக்கு ' அடைவதற்கு மாணவர்களுக்கு எப்போதும் உதவுகிறார்.

பி.கு : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..? ஒவ்வொரு ஆசிரியரும் சுயமதிப்பீடு செய்ய வேண்டும்!

Thursday, July 15, 2004

எண்ணங்களும் நம் குணங்களும் !

" மனிதன் தன் இதயத்தின் ஆழத்தில் எந்த எண்ணத்தைக் கொண்டிருக்கின்றானோ அதே போல் ஆவான் " என்பது முதுமொழி. அது முழு மனித வாழ்வையும் தழுவி நிற்கிறது.அதைவிட, வாழ்வின் எல்லா அம்சங்களையும் தொட்டு, அவன் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நிலைமைக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் காரணமாகிறது. ஒரு மனிதன் அவன் எண்ணுவதைப் போல ஆகிறான் என்பது வார்த்தைக்கு வார்த்தை உண்மை;அவனது எண்ணங்களின் மொத்த வடிவம்தான் அவனது குணம்.

ஒரு சிறு செடி, விதையில்லாமல் எப்படி துளிர்ந்து எழுவதில்லையோ அதுபோல மனிதனது ஒவ்வொரு செயலும் அவனது எண்ணம் என்கிற மறைந்து கிடக்கும் விதைகளில்லாமல் கிளம்புவதில்லை. அந்த எண்ண விதைகள் இல்லாமல் செயல் நேர்ந்திருக்க முடியாது.

திடீரென்று -- தானாக விளைந்த செயல் என்று சொல்லும் எல்லா செயல்களுக்கும் இது
பொருந்தும். திட்டமிடாது நேர்ந்த செயலும், நன்கு திட்டமிட்டு செயல்பட்ட காரியமும் எண்ண விதைகளிலிருந்து தான் வந்திருக்கின்றன.

செயல் எண்ணங்களின் மலர். இன்பமும் துன்பமும் அதன் கனிகள். ஆகவே, தான் வளர்த்த
தோட்டத்திலிருந்து தான், இனிப்பான அல்லது கசப்பான கனிகளை அவன் அறுவடை செய்கிறான்."

பி.கு : "வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்" எனும் நூலிலிந்து.....மூலம் - ஜேம்ஸ் ஆலன்; தமிழாக்கம் --> டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.

Sunday, July 11, 2004

தேசிய கல்வித் தத்துவத்தின் அடிப்படை நோக்கம் ?

இரசாக் கல்வி அறிக்கையும்(1956) இரஹமான் தாலிப் கல்வி அறிக்கையும்(1960) மலேசிய நாட்டு தேசிய கல்வித் தத்துவம் - கொள்கை உருப்பெறுவதற்கு அடித்தளமாக விளங்கின. இவ்விரு அறிக்கைகளைத் தொடர்ந்தே 1961-ஆம் ஆண்டில் கல்விச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மூன்று அரசு ஆவணங்களும் நாட்டு மக்களின் ஒற்றுமையை மையப்பொருளாகத் தாங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பல இன மக்கள் வாழும் மலேசிய நாட்டில் "ஒற்றுமையே" தேசியத் தன்மை பெறுவதற்கும் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கத்தை அடைவதற்கும் நல்வழி வகுக்கிறது. சுருங்கக் கூறின், நாட்டில் ஒற்றுமையைத் தொடர்ந்து நிலைநாட்ட 'கல்வித்துறை' ஒரு மறைமுக ஊடகமாகச் செயல்பட்டு வருகின்றது என்றாலும் மிகையாகாது.

"கே.பி.எஸ்.ஆர்" பாடத்திட்டம் மலேசிய மக்களின் விருப்பங்களையும், இலட்சியங்களையும், நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த அம்சங்களையும் உண்மையிலேயே பிரதிபலிக்கின்றதா என்பதை அறிய மிகக் கவனமாக 1982-ஆம் ஆண்டு முதல் மலேசிய கல்வி அமைச்சு ஒரு திட்டம் வகுத்தது. அமைச்சு அமைத்த அந்த சீராய்வுக் குழுவில் கல்வியமைச்சின் வல்லுநர்களையும் அரசு சார்பற்ற கல்வி நிபுணர்களையும் ஒன்று சேர்த்து தொலை நோக்கு திட்டம் வகுத்தது. அவர்களின் ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்துவதற்காக "தேசிய கல்வித் தத்துவம்" உருவாக்கப்பட்டது.

இத்தத்துவத்தின் நோக்கமானது, கல்வியினூடே "உடல்,மனம்,ஆத்ம,அறிவு" கொண்ட ஒரு சிறந்த, முழுமையான மனிதனை உருவாக்குவதையே வலியுறுத்துகிறது என்பது வெள்ளிடைமலை.

தேசிய கல்வித் தத்துவம் - மலேசியா

" மலேசியக் கல்வியானது இறைநம்பிக்கை, இறைவழி நிற்றல் எனும் அடிப்படையில் அறிவாற்றல், ஆன்மீகம், உள்ளம், உடல் ஆகியவை ஒன்றிணைந்து சமன்நிலையும் பெற தனிமனிதரின் ஆற்றலை முழுமையாக மேம்படுத்தும் ஒரு தொடர் முயற்சியாகும். இம்முயற்சியானது அறிவு, சால்பு, நன்னெறி, பொறுப்புணர்ச்சி, நல்வாழ்வுபெறும் ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றுச் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஒருமைப்பாட்டையும், செழிப்பையும் நல்கும் மலேசியரை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும். "

- மலேசியக் கல்வி அமைச்சு,1982

Friday, July 09, 2004

ஒரு புகழ்பெற்ற பிரார்த்தனை

இறைவா!
என்னை உன் அமைதியின் கருவியாக்கு.
எங்கே வெறுப்பு தோன்றுகிறதோ அங்கே அன்பை விதைப்பேன்.
எங்கே மனப்புண் ஏற்பட்டிருக்கின்றதோ அங்கே மன்னிப்பை விதைப்பேன்.

சந்தேகம் உள்ள போது நம்பிக்கையை.
சஞ்சலம் தோன்றுமிடத்து நல்ல காலம் வருவதை.
இருள் சூழுமிடத்து ஒளியை.
துயரத்தில் மகிழ்வின் விதைகளை.
ஓ! என் தெவத் தலைவனே!

ஆறுதல்படுத்தப் படுவதைவிட ஆறுதல் அளிக்கும் பணிக்கு என்னை ஆளாக்கு.
பிறர் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக பிறரைப் புரிந்து கொள்ள வழி காட்டு.

அன்பு செலுத்த வேண்டும் பிறர் என்று அவாவுவதைவிடப் பிறருக்கு அன்பு செலுத்தும் பணியில் ஆளாக்கு.

ஏனெனில்,
கொடுப்பதில்தான் பெறுகிறேன்.
மன்னிக்கும்போதுதான் மன்னிக்கப்ப்டுகிறேன்.
சாவதில்தான் அமரத்தன்மை பெறுகிறேன்.


குறிப்பு: இத்தாலி நாட்டில் உள்ள அசிசி என்ற ஊரில் பிறந்த செயிண்ட் பிரான்சிஸ் அவர்களின் பிரார்த்தனை. நன்றி- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி - 'மனம், பிரார்த்தனை, மந்திரம்' எனும் நூலிலிருந்து.

மலேசிய நாட்டின் தமிழ்ப்பள்ளிகளின் நிலை -2

ஒரு காலத்தில் மலேசியாவில் 900 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன என்றால் பலர் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் இப்பொழுது அதன் எண்ணிக்கை 526. ஏன் குறைந்தது? முன்பு தோட்டப்புறத்தில் வாழ்ந்த இந்தியர்களின் அடுத்த தலைமுறை பிழைப்புத் தேடி நகர்ப்புறத்தை நாடினர்; மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததனால் மூடப்பட்டது. மேலும் தோட்டப்புறங்களில் உள்ள குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை( கட்டட அமைப்பைக் கண்டால் பள்ளி எனக் கூற இயலாது என்பது வேறு விசயம் ) கூட்டுச் சேர்த்து " கூட்டுத் தமிழ்ப்பள்ளி " என மாற்றம் கண்டதாலும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்தது. இம்மாதிரியான கூட்டுத்தமிழ்ப்பள்ளிகள் 1979-இன் இறுதியிலும் 1980-இன் ஆரம்பங்களிலும் பிரபலம்.

ஏனெனில், அடியேன் ஒரு கூட்டுத்தமிழ்ப்பள்ளியில் இருந்து வந்தவன். தீபகற்ப மலேசியாவில் தெற்கே உள்ள "ஜோரான" ஜொகூர் மாநிலத்தில் - சிகாமாட் மாவட்டத்தில் - ச்சா'ஆ ( சாகா வரம் பெற்ற ஊர் ) எனும் சிறு பட்டனத்தில் அமைந்துள்ள " ச்சா'ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளிதான் " அது.

Thursday, July 08, 2004

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் இன்றைய நிலை !

தற்போது நாட்டில் 526 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 77 சதவிகித தமிழ்ப்பள்ளிகள் பகுதி மானியம் பெறுபவையாகும். அதாவது 120 பள்ளிகள் மட்டுமே அரசாங்கத்தின் முழு மானியம் பெறுகின்றன. இதர 406 தமிழ்ப்பள்ளிகள் தனியார் நிலங்களில் இருப்பதன் ஒரே காரணத்தால் இவை அடிப்படை வசதி குறைந்த நிலையில் இருக்கின்றன. இப்பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதும், அவ்வப்போது அரசியல் தலைவர்களும், தலைமையாசிரியர் மன்றங்களும் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளும் குரல் எழுப்பி வருகின்றன.

கடந்த ஜூன் மாதத்தில் பூலாவ் லங்காவியில் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கப் பேராளர் கூட்டத்திலும் இப்பிரச்னை விவாதிக்கப்பட்டு சங்கத்தின் கோரிக்கையாக அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை விரைவில் ஏற்கப்பட வேண்டும் என்பதே இந்திய சமூகத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.

இன்னமும் அவை தனியார் நிலங்களில் இருக்கின்றன என்று கல்வி அமைச்சு சாக்குப்போக்குச் சொல்லி தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளான தரமான கட்டடம் மற்றும் மேசை, நாற்காலிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதில் என்ன நியாயமிருக்கிறது ?