.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Friday, April 14, 2006

தமிழ்ப்பள்ளி பிரச்னைகளுக்குத் தீர்வு காணுங்கள்!

மலேசியா முழுதும் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளில் சுமார் 150 தமிழ்ப்பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளது என்றும், இன்னும் "பந்துவான் மோடாலில்" தள்ளப்படுவதாகவும், மாவட்டக் கல்வி இலாகாவில் தமிழ் அதிகாரிகள் இல்லையென்றும் மற்றும் தலைமை அமைப்பாளர் நியமிக்கப்படவில்லையென்றும் 'என்யூடிபி' ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் தலைமைச் செயலாளர் திருமதி லோக் இம் பெங் கூறியுள்ளார்.

இப்படி எத்தனையோ பிரச்சனைகள் தமிழ்ப்பள்ளிகளில் நிலவுவதை அறியாமல் 524 தமிழ்ப்பள்ளிகளில் 50 தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமே வருகை புரிந்துள்ள கல்வியமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் திருமதி கோமளா கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்களின் வேதனை சுமை தெரிந்திருக்க நியாயமில்லை என்று திருமதி லோக் இம் பெங் சாடியுள்ளார்.

அவர் மேலும் ...

ஆசிரியர்கள் மாதத்தில் நான்கு சனிக்கிழமைகளிலும் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் உள்ளது எனவும், சனிக்கிழமைகளில் பணியாற்றுவது தொடர்பான சுற்றறிக்கை தெளிவானதாயில்லை என்பதால் தலையாசிரியர்களும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.

ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை, மன அழுத்தம், ஓய்வின்மை ஆகிய பல்வேறு பிரச்னைகள் தக்க ஆதாரத்துடன் கல்வியமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் திருமதி கோமளா கிருஷ்ணமூர்த்தி அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கருத்துரைத்தார்.

குறிப்பு: இந்த சித்திரைப் புத்தாண்டிலாவது தமிழ்ப்பள்ளிகள், பள்ளிகளில் நிலவும் 220 தமிழாசிரியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்று பார்ப்போம்!

Wednesday, April 12, 2006

நானே பொறுப்பு!

அனைவருக்கு கனிந்த வணக்கம்.

நீண்ட இடைவெளி....
என்ன செய்வது....
இப்படி எழுதி சமாதானப் படுத்திக் கொள்வதுதான்!

"எதையும் ஏற்றுக் கொள்கின்ற மண்போல நாம் இருக்க வேண்டும்! விதை புதைந்து வெளியே முளைக்கின்ற இளம் தளிர் போல புதிய விசயங்களைக் கற்றுக் கொள்கிற ஆர்வம்,முயற்சி,பொறுமை இவற்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்கிற ஒரு விசயம் பற்றி விளக்க முயல்வது ஆபத்தானது. எனவே, கற்கும் போது நாம் கவனிப்பவர்களாக இருக்க வேண்டும்.

எப்படி கற்றுக் கொள்வது? அமைதியாக கூர்ந்து கவனித்தல் மட்டுமே போதுமானது. எந்த விசயத்தைப் பற்றியும் முன்கூட்டியே கருத்துகளை வளர்த்துக் கொள்ளாமல் திறந்த மனத்துடன் அதை அணுகுவோம். சிந்திக்காமல் ஒரு விசயத்தை அது எப்படி தோன்றுகிறதோ அப்படியே ஆரம்பிப்போம், அவதானிப்போம்.

இதுவரை தவறான அணுகுமுறையினால் நம் வாழ்க்கை அலைக்கழிக்கப்பட்டிருக்கலாம். எதிர் காலத்தில் நம்வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பது இப்போதே தீர்மானிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். திட்டமிடாமல் செய்யும் எந்தக் காரியமும் முழுமையடைவதில்லை. நம்முடைய கருத்துக்கள் சரியானதாக இருந்தாலும் நடைமுறைப் படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக் காரணம் திட்டமிடாமல் செயல்படத் தொடங்குவதுதான். நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும், அதன் விளைவுகளுக்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டு."


எனவே, இவ்வளவு காலம் இங்கு பதிவு செய்யாததற்கு நானே பொறுப்பு!

அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்.