.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Friday, January 04, 2008

இன்பத் தமிழ் அமுது

தமிழ்க்கூறு நல்லுல்கில் தமிழ்மக்களால் புரட்சிக்கவி என்றழைக்கப்படும் பாரதிதாசனால் இன்தமிழ், 'இன்பத் தமிழ்' எனும் கவிதை இயற்றப்பட்டது. தமிழைப்பற்றி இவர் வடித்த கவிதைகளில் இஃது மிகவும் பிரபலமாவதற்கு ஊடகம் முக்கியப்பங்காற்றியுள்ளது என்றால் மிகையாகாது. அவர் இயற்றிய அக்கவிதையின் விளக்கத்தைக் காண்போமா?

அமுதம் இனிமை மிக்கது; உண்டவரை நெடு நாள் சிறப்புற்று வாழ வைக்கும் தன்மையை உடையது. தமிழும் கற்பவருக்கு அத்தகைய நன்மைகளைப் பயக்கும் என்பதால் அமுது என அழைக்கப்படுகிறது. இனிமை மிக்க தமிழ், அம்மொழியைப் பேசும் தமிழர்களுக்கு உயிருக்குச் சமமானதாகும். நிலவின் குளிர்ச்சியான ஒளி உடலுக்கு இதமளிப்பதைப் போன்று, கற்போரின் உள்ளத்திற்குத் தமிழ் இதமாக இருப்பதால், அத்தமிழ் நிலவென அழைக்கப்படுகிறது.

இனிமை மிக்க தமிழ்,சமுதாயம் எனும் பயிர் விளைவதற்கு ( முன்னேற்றத்திற்கு ) நீர் போன்றதாகும். தமிழ்மணம் எனவும் அழைக்கப்படுகிறது. அதுவே தமிழர்களின் வாழ்வை உறுதி செய்யத்தக்க ஊருக்குச் சமமாகும். தமிழைக் கற்போர் அதன் ஆற்றலால் சொக்கி, இன்ப மயக்கம் அடைவதால், அத்தமிழை மது என அழைக்கிறோம். இன்பம் தரும் தமிழ் எங்களுடைய உரிமை எனும் செழிப்பான பயிருக்கு வேர் போன்று அவசியம் மிக்க ஒன்றாக விளங்குகிறது.

தமிழ், எங்கள் சமுதாயம் என்றும் இளமை குன்றாது துடிப்போடு செயல்பட ஆற்றலை வழங்கும் பாலுக்குச் சமமானது. இனிமை மிக்க தமிழ் சிறப்புற்று விளங்கும் புலவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஆயுதமாக விளங்குகிறது. வானத்திற்கு எல்லை இல்லை. அது போல எல்லை இல்லா அளவிற்கு நாங்கள் முன்னேற்றமடைய தமிழ் அடிப்படையாக விளங்குகிறது. இனிமை மிக்க தமிழ் எங்கள் சோர்வைப் போக்கி புதுத்தெம்பை அளித்திடும் தேன் போன்றதாகும். தமிழராகப் பிறந்த எங்களுக்குத் தமிழ், தாயாக விளங்குகிறது. இன்பத்தமிழ் செம்மை மிக்க எங்கள் மனங்களின் ஆற்றல் மிக்க சக்தியாக விளங்குகிறது.

இவ்வாறு வரிக்கு வரி தமிழ்ச்சுவையைத் தெளித்துள்ளார் புரட்சிக்கவி பாரதிதாசன். இதோ அந்த அமுத வரிகள்....

தமிழுக்கும் அமுதென்றுபேர் ! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்குநேர் !
தமிழுக்கு நிலவென்றுபேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்குநீர் !
தமிழுக்கு மணமென்றுபேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர் !
தமிழுக்கு மதுவென்றுபேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்குவேர் !
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்குவேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்ததேன் !
தமிழ் எங்கள் பிறவிக்குத்தாய் ! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

- பாரதிதாசன்.