.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, January 30, 2005

இறைவா! இதை என்னால் செய்யமுடியுமல்லவா?

( ஸ்வஸ்தி வசனத்தை ஒட்டிய தியானமும், பிரார்த்தனையும் )
முதல் வசனத்தை அடிப்படையாகக் கொண்ட விளக்கவுரை:

இறைவா, நான் இந்த உலகைப் படைக்கவில்லை.
ஆயினும் நான் என்னை இதில் காண்கிறேன். இவ்வுலகில்
எத்தனை எத்தனையோ மக்கள் இருக்கின்றனர்.
அனைவரும் உன்னால் படைக்கப்பட்டவர் என்பதால்,
அவர்களுடன் எனக்கு ஓர் உறவு இருப்பதை நான்
உணர்கிறேன். இந்த உணர்வின் வெளிப்படையாக
அனைவரையும் வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் என் நல்லுணைவை அனுப்புகிறேன்.

இறைவா! இதை என்னால் செய்யமுடியுமல்லவா?

இவ்வுலகில் அரசியலும், அரசியல்வாதிகளும்
என்னை பயமுறுத்துகின்றன.
ஆயினும், அரசாட்சியை நடத்துபவர்கள் வேண்டும்
என்பதை நான் உணர்கிறேன்.

அரசாள எவரும் இல்லை என்றால், எவ்விதமான
அராஜகம் தலை விரித்தாடும் என்பதை அறிகிறேன்.
ஆனால், தினந்தோறும் பத்திரிகைகளைப்
பார்க்கும்போது என்னால் வருத்தமடைவதைத்
தடுக்க் முடியவில்லையே! நான் என்ன செய்வது?
தேர்தலில் நிற்க நான் தகுந்தவனும் இல்லை,
தயாராகவும் இல்லை.
ஆனால், இறைவா, என்னால் ஒன்று செய்ய முடியும்,
என்னால் பிரார்த்தனை செய்ய முடியும்.

இறைவா! இதை என்னால் செய்யமுடியுமல்லவா?

(குறிப்பு : மேலேயுள்ள விளக்கவுரையானது முதல் ஸ்வஸ்தி வசனத்தின் ஒரு பகுதி மட்டுமே)

நன்றி : ஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைக்கட்டி.

Saturday, January 29, 2005

பிரார்த்தனை !

  1. மக்களுக்கு நலம் உண்டாகுக. ஆள்பவர்கள் இந்த பூமியை நியாயமான மார்க்கத்தில் ஆளட்டும். சான்றோர்களுக்கு எப்பொழுதும் சுபம் உண்டாகட்டும். அனைத்து உயிர்களுக்கும் சுகமாக இருக்கட்டும்.
  2. மேகங்கங்கள் காலம் தவறாமல் மழை பொழிய வேண்டும். பூமியானது அதிக தான்யங்களை அளிக்க வேண்டும். இந்த தேசமானது குழப்பங்கள் இன்றி இருக்க வேண்டும். சான்றோர்கள் பயமின்றி வாழ வேண்டும்.
  3. அனைவரும் சுகமாக இருக்கட்டும். அனைவரும் நோயற்று ஆரோக்கியமாக இருக்கட்டும். அனைவரும் நன்மையையே காணட்டும். எவருமே துக்கத்தை அடையாமல் இருக்கட்டும்.
  4. அநித்தியத்திலிருந்து என்னை ( ஞானத்தின் மூலம் ) நித்யத்திற்கு அழத்துச் செல்வாயாக. அறியாமை எனும் இருட்டிலிருந்து என்னை ஞானமெனும் ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக. பந்தமெனும் மரணத்திலிருந்து என்னை மோட்சமெனும் அழியா நிலைக்கு அழைத்துச் செல்வாயாக.
  5. தோன்றுவதற்கு முன்பும் ப்ரஹ்மம் பூரணமாக இருந்தது. இவ்வுளகம் தோன்றியபின்னரும் அது பூரணமாக உள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை நீக்கினாலும் அது எப்பொழுதும் பூர்ணமாகவே உள்ளது. ஆதலால் அனைத்தும் பூர்ணமே.
  6. இறைவா, இந்த ஆன்மீக மார்க்கத்தில் என்னிடமிருந்தே தோன்றக்கூடியதும், பிற உயிர்களின் மூலம் வரக்கூடியதும், இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படக்கூடியதுமான இடையூறுகளிலிருந்து எனக்கு சாந்தி உண்டாகட்டும்.

( தமிழாக்கம் - ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி )

Wednesday, January 26, 2005

பினாங்கில் தைப்பூசத் திருவிழா

பினாங்கு, ஜன.25
இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவைக்காண, பினாங்கு ஸ்ரீ பால தண்டாயுத பாணி ஆலயத்திற்கு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடினர். கோலாலம்பூர் - பத்துமலைக்கு அடுத்து மலேசியாவில் தைப்பூசத் திருவிழா என்றால் அது பினாங்கு மாநிலத்தில்தான் என்றால் மிகையாகாது.
முதல் நாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோவில் வீட்டில்
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஒன்று கூட, வெள்ளி ரத ஊர்வலம் புறப்பட்டது. கோவில் வீட்டிலிருந்து புறப்பட்ட வெள்ளி ரத ஊர்வலத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.
அர்ச்சனை செய்தவர்களில் இந்துக்கள் மட்டுமல்லாது சீனர்களும் அடங்குவர். வெளிநாட்டிலிருந்து வந்த சுற்றுப் பயணிகளும் தைப்பூசத் திருவிழாவைக் கண்டுகளித்தனர்.
வெள்ளி ரத ஊர்வலத்தின் போது அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் வழி நெடுகிலும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து சுவை நீர் மற்றும் அன்னதானம் வழங்கினர்.
பினாங்கு மாநிலத்திலுள்ள 'மலேசிய அறிவியல் பல்கலைக்கழக - இந்திய பணியாளர் சங்கமும் - மாணவர்களின் 'இந்திய பண்பாட்டுக் கழகமும்' இணந்து முதல் நாள் இரவு அன்னதானமும் மறுநாள் தண்ணீர் பந்தலில், சுவைநீரும் வழங்கினர்.
"ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரியான தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்து வருகிறோம்; அன்னதானமும் வழங்கி வருகிறோம். மக்கள் திரளாக வருகின்றனர்; இன்று இரவு ஏழரைக்கு அன்னதானம் தொடங்கினோம் - பதினொன்றரை வரை மக்கள் வரிசைப்பிடித்து நின்று உணவருந்திச் சென்றனர் " என்று இந்திய பணியாளர் சங்கத் தலைவர் திரு. முனியாண்டி அவர்கள் கருத்துரைத்தார். " பல்கலைக்கழக இந்து மாணவர்கள் பலர் மக்களுக்கு அன்னதானம் மற்றும் சுவைநீர் வழங்க உதவி புரிந்தனர் " என்று அவர் மேலும் தெரிவித்தார்.
" இவ்வாண்டு பினாங்கு தைப்பூசத்தில் கலந்து கொண்ட PMR, SPM & STPM மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கி சிறப்பு செய்த - சக பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இம்மாதிரியான புறப்பாட நடவடிக்கை,
குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு நல்ல அனுபவத்தையும் தலைமைத்துவத்தையும்
ஏற்படுத்துகின்றது!" என்று USM தண்ணீர் பந்தல் மாணவர் குழுத் தலைவர் சகோதரர் - பழனி உற்சாகத்துடன் கருத்துரைத்தார்.
பொது மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு பினாங்கில் போலீசார் தீவிர பாதுகாப்பில் இருந்தனர்.

Sunday, January 02, 2005

2005 - புதிய கல்வி ஆண்டு பிறக்கிறது.

2 ஜனவரி, 2005

நாட்டிலுள்ள 525 தமிழ்ப்பள்ளிகள் நாளை நாளை புதிய கல்விப் பருவம் துவங்குகிறது. பெரும்பாலான பள்ளிகளில் இன்றே புதிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கக் கூட்டம் பள்ளி நிர்வாகத்தினரால் நடத்தப்பட்டது.


ஜோகூரில், குளுவாங் தமிழ்ப்பள்ளியில் வழக்கம் போல் "வித்யாரம்பம்" - புதிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக சிறப்புப் பிரார்த்தனையுடன் நடைபெற்றது.

"இவ்வாண்டு குளுவாங் தமிழ்ப்பள்ளியில் 150 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்" என்று பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு.ச.மணிவண்ணன் அவர்கள் தெரிவித்தார்.

"காலை 8.00 மணியளவில் பதிவு; 8.30 க்கு 'வித்யாரம்பம்' சமய சடங்குகளுடன் ஆரம்பம். தலைமையாசிரியர் 'தங்கத் தட்டில்', மஞ்சள் அரிசியில் அகரம் எழுத அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களும் தங்கள் பெற்றோர்களின் துணையுடன் 'அகரம்' எழுதி கல்வி வித்தையை ஆரம்பித்தனர்" என்று ஆசிரியர் திரு.ச.மணிவண்ணன் அவர்கள் 'விவேகம்' வலைப்பூவுக்காக தொலைபேசி வழி தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் தொடர்ந்து பஜனைப் பாடல்களும் பாடப்பட்டது. குளுவாங் ரிவர் டெக்ஸ் குருக்கள் திரு தாமோதரன் அவர்களின் தலைமையில் தெய்வீகம் கமழ பள்ளி மண்டபத்தில் 2005- ஆண்டின் புதிய கல்விப் பருவம் துவக்கம் கண்டது.

அதனைத் தொடர்ந்து, புதிய மாணவர்களுக்குக் குழு விளையாட்டு, பாடல் மற்றும் ஆசிரியர்களுடன் அறிமுகம் - என்ற அங்கமும் இருந்தது. இறுதியாக,
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ( திரு. சுப்ரமணியம்) , பள்ளி தலைமை ஆசிரியர்( திரு. சண்முகம்), கல்விப் பிரிவு துணைத் தலைமையாசிரியர் ஆகியோரின் விளக்க உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு கண்டது. இந்நிகழ்வில் மாணவர்கள் ( 120 ), ஆசிரியர்கள் ( 60 ) மற்றும் பெற்றோர் ( சுமார் 150 ) பேர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

தகவல் : ஆசிரியர் திரு.ச. மணிவண்ணன்(குளுவாங் தமிழ்ப்பள்ளி)

இது போன்று நாளை முதலாம் ஆண்டில் காலடி வைக்கும் ( 525 பள்ளிகள்) அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து கூறி தமிழ்த்தாயின் அருளாசி பெற்று கல்வி கேள்விகளில் சிறந்திட இறைஞ்சுகிறேன். அதே வேளையில் புதிதாக ஆசிரியர் பணிக்கு வந்திருக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து தமிழாசிரியர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

அன்புடன்,
எல்.ஏ. வாசுதேவன்,
USM, Penang.