.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Thursday, November 25, 2004

சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள சம்பந்தம்!

டாக்டர் எம்.எஸ். உதய மூர்த்தி அவர்கள் எப்போதோ எழுதியது...(குமுதத்தில்)

சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு உறவு இருக்கிறது. அதை நாம் புரிந்து கொள்ளும் போது நாம் சொல்கிற வார்த்தை மந்திரம் போல் நிறைவேறும்.
ஒரு மனிதரிடம் பொய்யாக ஒரு வார்த்தையைத் தற்பெருமைக்காகவோ சமாதானத்திற்காகவோ சொல்கிறோம். சொல்லும் போதே நமக்குத் தெரியும் 'இதை நாம் செய்யப் போவதில்லை' என்று. இப்படிச் சொல்லிச் சொல்லி பழக்கப்படும் போது, 'சொல்லப்படுகிற வார்த்தைகளை செயல்படுத்த வேண்டியதில்லை' என்ற மனப் பழக்கத்தை நம் ஆழ்மனம் ஏற்றுக் கொள்கிறது. பிறகு ஒரு நாள் 'இதை இப்படிச் செய்வேன்' என்று சொல்லும்போது ஆழ்மனம் இதை ஏற்றுக் கொள்வதில்லை! "செய்ய வேண்டியதில்லை! நிறைவேற்றத் தேவையில்லை!" என்று பழைய பாதையில் செல்கிறது.
செய்ய வேண்டியதில்லை என்று அலட்சியப்படுத்தும் ஆழ்மனத்திற்கும் செய்து முடிக்க வேண்டும் என்ற நம் தீர்மானத்திற்கும் ஒரு போராட்டம் ஏற்படுகிறது. இதன் விளைவாக மனம் தடுமாறுகிறது.
"செய்யப் போவதைத்தான் பேசுகிறோம்" என்று ஆழ்மனம் நம்பும்போது, காரியத்தை நிறைவேற்ற ஆழ்மனம் நம்மை அறியாமல் செயல்படுகிறது. நம்மை செயல்பட உந்துகிறது. நமது இலட்சியம் நிறைவேறுகிறது.
மனத்திற்கும் செயலுக்கும் உறவில்லாதபோது மனத்தில் நம்பிக்கை இல்லை, ஈடுபாடு இல்லை. அந்த வேலையை செய்யத் தயாராயில்லை.
"செய்கிறேன்!" என்று சொல்லிவிட்டு செய்யாமலிருக்கும் போது ஆழ்மனத்தை நேர் எதிர்த் திசையிலொ அனுப்புகிறோம். நமக்குக் காரியம் ஆக வேண்டிய போதும் அது அந்த பழக்கம் காரணமாக நேர் எதிர்த் திசையில் செல்கிறது!"
சொல்லுக்கும் செயலுக்கும் உறவை ஏற்படுத்துங்கள்!
குறிப்பு : டாக்டர் எம்.எஸ்.உதய மூர்த்தி எழுதிய மனோதத்துவத் தொடர்களை பல ஆண்டுகளாக படித்து வருகின்றேன். அவருடைய முதல் புத்தகம் "எண்ணங்கள்" பலர் வாழ்வில் விளைபயன்மிக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, November 16, 2004

ஆசிரியர் தரம்

தரமான ஆசிரியர்களின் பண்புகள் என்ன ?
பெரும்பாலும் ஆசிரியர் தரம் என்றவுடனேயே ஆசிரியர்களின் கல்வியறிவு அல்லது அவர்கள் பெற்றுள்ள சான்றிதழ்களின் அடிப்படையிலேயே நாம் இதை நோக்குவது இயல்பாகி விட்டது. எனினும், ஆசிரியர்களின் கல்வியறிவை மட்டும் வைத்து அவர்களின் தரத்தை நிர்ணயிப்பது பொருத்தமில்லாத ஒன்றாகும்.
ஆசிரியர் தரம் என்பது, அவர்கள் பெற்றுள்ள கல்வியறிவு, பணித்திறப் பயிற்சி, பணி தொடர்பான சிறப்புப் பயிற்சி, மனப்பான்மை, பொறுப்பேற்கும் தன்மை, முனைப்பு, பணியின் தரம், நோக்கு நிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஓர் ஆசிரியர் தரமான கற்றல் கற்பித்தலை வழங்க முடியும். ஒருவர் உயர்ந்த கல்வியறிவைப் பெற்றிருந்தாலும், அவருக்கு ஒரு நல்லாசிரியருக்கு இருக்க வேண்டிய மனப்பான்மை இல்லையெனில், அவர் தம் பணியினை சிறப்பாகச் செய்ய மாட்டார். இதனால் அங்கு தரமான கற்றல் கற்பித்தல் நடைபெற வழியில்லாமல் போய்விடும்.
இப்பண்புகளை எப்போதும் எப்போதும் பேணிக் காப்பது ஒரு ஆசிரியரின் கடமையாகும். இதில் எவையேனும் ஒரு பண்பிலேயோ அல்லது பல பண்புகளிலிலேயோ ஒருவர் குறையுடையவராக இருந்தால், அதில் ஏற்றம் காண முயற்சிக்க வேண்டும். அதுவே நல்லாசிரியரின் பண்பாகும்.
ஆசிரியர்கள் எப்போது புதிய புதிய செய்திகளைத் தெரிந்து கொள்வதை நிறுத்துகின்றார்களோ, அக்கணமே அவர்கள் ஆசிரியர் தொழிலைச் செய்யும் தகுதியை இழக்கின்றனர். ' When teachers stop being learner, they should immediately stop being teachers' என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
( 1992-இல் கோலாலம்புரில், மலாயாப் பல்கலைக்கழகத்தில் ம.இ.காவின் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2020 இலக்கை நோக்கித் தமிழ்ப்பள்ளிகள்: ஒரு தேசியக் கருத்தரங்கில் படைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி- படைப்பு : முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள், UPSI பல்கலைக்கழகம் )
குறிப்பு : தற்போது முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் UNESCO-வின் அனைத்துலக கலை கலாச்சாரக் குழுவின் கல்வியாளர்களுக்கான
செயற்குழுவின் உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார் என்பது மலேசிய இந்தியர்களுக்குப் பெருமையளிக்கும் விசயமாகும். முனைவர் என்.எஸ் அவர்களுக்கு மலேசியத் தமிழாசிரியர்களின் சார்பில் மானமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். )

Tuesday, November 02, 2004

மூவாரில்-மாநில அளவிலான "முத்தமிழ் விழா 2004"

மலேசிய நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மொழிக்காக மட்டும் அல்ல என்பதை அவ்வப்போது நடைபெற்று வரும் கலை, இலக்கியம் மற்றும் சமயம் தொடர்பான நிகழ்ச்சிகள் மெய்ப்பித்து வருகின்றன.
பிற மாநிலங்களில் இயல், இசை, நாடகம் அடங்கிய முத்தமிழ் விழாக்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும், ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 'முத்தமிழ் விழா'வை வட்டாரம், மாநிலம் அளவில் நிகழ்த்தி வருவது தமிழுக்கு ஆற்றி வரும் மகத்தான காரியமாகும்.
நேற்றைய முன்தினம், ( 30.10.2004 - சனிக்கிழமை ) மூவார் பட்டினத்தில் உள்ள தமிழ்ப்பள்ளியில் மிகவும் கவரும் வகையில் ஜோகூர் மாநில ரீதியான 'முத்தமிழ் விழா 2004' நடைபெற்றது. ஜோகூர் மாநிலத் தலைமையாசிரியர் மன்றத்தினரால் நடைபெற்றுவரும் இவ்விழாவானது 12-வது அகவையைத் தொட்டுவிட்டது கண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். மாநில ம.இ.கா தொடர்புக்குழுத் தலைவரும் மாநில ஆட்சி மன்ற உறுப்புனருமாகிய மாண்புமிகு டத்தோ K.S.பாலகிருஷ்ணன் அவர்கள் நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார். இனி ஆண்டுக்குப் பத்தாயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்க இசைந்துள்ளது போற்றுதலுக்குரியது. அவர் தமதுரையில் மேலும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.....அதாவது 'முத்தமிழ் விழா'வை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதேயாகும். தலைமையாசிரியர்களுக்கெல்லாம் இது 'தலையாயச் சவால்' என்பது என் கருத்து.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 'முத்தமிழ் விழா' போட்டிகளில் பங்கு கொள்கின்றனர். தமிழ்க் கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, புதிர்ப் போட்டி, திருக்குறள் கதை கூறும் போட்டி, இசைப் பாடல், நடனம் மற்றும் நாடகம் எனப் பற்பலக் கூறுகளில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை வெளிக்கொணரும் ஒரு களமாகத் திகழ்கிறது 'முத்தமிழ் விழா'. வட்டார ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் முதல்நிலை அடைந்தவர்கள் மாநில அளவில் இறுதிச் சுற்றில் பங்கேற்று வருகின்றனர்.
போட்டிக்கு முன் மாணவர்களைத் தேர்வு செய்வதிலிருந்து அவர்களுக்குப் பயிற்சி அளித்துத் தயார் படுத்துவதோடு மட்டுமல்லாமல், போட்டிக்குத் தேவையான துணைக் கருவிகள் மற்றும் உபகரணப் பொருட்களைத் தயாரிப்பதிலும் ஆசிரியர்கள் பெரும் சிரத்தை மேற்கொண்டு வருவது பாரட்டுதலுக்குரியது. போட்டிகளில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்கு மகிழ்ச்சி. மாணவர் பருவத்தில் அவர்கள் பெறும் அனுபவங்களில் மகத்தான
ஒன்றாக இது போன்ற நிகழ்வுகள் மனதில் பதியும். ஆசிரியர்களுக்கு ? உளப் பரினாமம் ஏற்படலாம்.....சக ஆசிரியர் நண்பர்களின் பாராட்டுகள் உற்சாகம்
ஊட்டலாம்.....இவை அவர்களின் பணிக்காலச் சுவடுகள்!
விழா ஏற்பாட்டுக் குழுவினர்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!