.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, October 26, 2004

குளுவாங்கில் முத்தமிழ் விழா

கனிந்த வணக்கம். தற்போது சற்றேரக்குறைய ஒரு மாத கால விடுமுறையில் இருக்கிறேன். எங்கள் ஜோரான ஜோகூர் மாநிலத்தில், குளுவாங் எனும் ஊரிலிருந்து எழுதுகிறேன்.
ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு வரும் போது, தற்செயலாக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இயல்பாகிவிட்டது. திட்டமிட்ட சில காரியங்களும் உண்டு. அதைப் பற்றி பிறகு குறிப்பிடுகிறேன். எல்லாமே தமிழ், தமிழ்ப்பள்ளி, தமிழாசிரியர்கள் மற்றும் அவை சார்ந்த தொழில் நுட்பம் பற்றியதுதான்.
பினாங்கிலிருந்து குளுவாங்கிற்கு வந்த மறுநாள் ( 23.10.2004) குளுவாங், ஹஜி மானான் தமிழ்ப்பள்ளியில் பத்து பகாட், குளுவாங், மெர்சிங் ஆகிய மூன்று வட்டாரத்தைச் சார்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் போட்டிகளாக முத்தமிழ் விழாவில் நாடைபெற்றது. 'முத்தமிழ் விழா' எனும் இந்நிகழ்ச்சி ஆண்டு தோறும் தலைமையாசிரிகளின் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சியாகும். இதே போன்று ஜோகூரில் பிற மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாவட்டங்களில் முதல் நிலை பெற்ற குழுவோ அல்லது மாணவரோ மாநில முத்தமிழ் விழாவில் கலந்து கொள்வர். அது அனைத்து போட்டிகளுக்கும் ( இசைப்பாடல், திருக்குறள், கதை கூறுதல், கவிதை, கணினி வரைகலை,புதிர், நடனம், நாடகம் போன்றவை ) இறுதிச்சுற்றாகும்.
எம்மை கணினி வரைகலை போட்டிக்கு நீதிபதியாக்கினார் விழா ஏற்பாட்டுக் குழு தலைவரும், பத்து பகாட், குளுவாங், மெர்சிங் வட்டாரத் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் உயர்திரு. கெ.முனுசாமி அவர்கள். அடியேன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அன்றைய நிகழ்வின் நிறைவுக்கு முந்திய அங்கமாக 'தமிழ் மொழியும் பண்பாடும் - ஒரு கண்ணோட்டம்' எனும் கருப்பொருளைக் கொண்ட ஒரு பல்லூடகப் படைப்பும் காண்பிக்கப்பட்டது. அது, தமிழ் செம்மொழி அங்கிகாரம் கிடைக்கப்பெற்ற பின் எழுந்த உத்வேகத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்வேன்.
தமிழ் ஆர்வம், உணர்வுமிக்க தமிழாசிரியர்கள் ஒலி ஒளி காட்சி முடிவுற்றதும் எமக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய தலைமையாசியர் மன்றத் தலைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(பயணம் தொடரும் ..)

Monday, October 18, 2004

மன அழுத்தத்தைப் போக்குங்கள்!

மன நெருக்கடி அல்லது உளைச்சல் காரணமாக உடலில் ஏற்படும் தளர்ச்சி அல்லது தேய்மானந்தான் மன அழுத்தமாகிறது. இது உடலில் அல்லது உளவியல் காரணமாக உண்டாகலாம். மன அழுத்தத்தைப் போக்கவே முடியாதா ? அழுத்தத்தை நம்மால் முறியடிக்க முடியும்! அதுமட்டுமின்றி, அதனை நமக்கு சாதமாகப் பயன்படுத்தவும் முடியும்.
சரி, என்ன செய்யலாம் ? முதலில் மனநிலைக்கு ஏற்ப வேலை செய்யவும். எந்த வேலையிலும் முழு ஈடுபாடுடன் செயலாற்றவும். பிடிக்காத வேலையை வேண்டா வெறுப்பாகச் செய்தால் கண்டிப்பாக மன அழுத்தம் ஏற்படும். எதிலும் அபாயம், அனுகூலம் என்ற இரண்டும் இருக்கும். நாம் அணுகுவதில்தான் நமக்கு அபாயம் ஏற்படுமா அல்லது அனுகூலம் ஏற்படுமா என்று தெரியும். எனவே, எந்த வேலையையும் சவாலாக எடுத்துக் கொண்டு நாம் அணுகினால்தான் நமக்கு வெற்றி நிச்சயம்.
சிந்தனையை மாற்றவும். கடும் மன அழுத்தத்தில் இருக்கும் போது அந்த மனநிலையில் இருந்து விடுபட வேறு சிந்தனை உங்களுக்கு உதவுமானால் உடனே உங்கள் சிந்தனையை மாற்றுங்கள்.
நல்ல சிந்தன தேவை. நிச்சயமற்ற நிலை பற்றி உணரும் போது வெற்றி அல்லது கடந்த கால சிந்தனைகள் பற்றி நினைத்துப் பாருங்கள். நம் முயற்சி தோற்றுவிடுமோ என்று எப்போதும் எதிர்மறையாக சிந்திக்கக் கூடாது.
உடலுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுப்பது போல் மனதுக்கும் ஓய்வு தேவை. கடும் வேலைக்கிடையே கடற்கரையில் சுகமாகப் படுத்து ஓய்வு எடுப்பது போலவோ, உல்லாசப் பூங்காவில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் விளையாடுவதைப் போலவோ நினைத்துப் பார்த்தாலே மனதுக்குப் புதுத் தெம்பு கிடைக்கும்.
நல்ல உடற்பயிற்சி, நாட்டியம், இசையை ரசிப்பது, நகைச்சுவையை விரும்வது, வெந்நீரில் குளிப்பது, நீர்வீழ்ச்சியில் நீராடல் போன்றவை மூலமும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
இறுதியாக, எதற்கும் கவலை வேண்டாம்! மகிழ்ச்சியாக இருந்தாலே மன அழுத்தம் குறைந்துவிடும்.

குறிப்பு : சில நேரங்களில் யாரையாவது வாய்க்கு வந்தபடி திட்டினாலோ, அல்லது சுத்தமாக அழுதாலோ மன அழுத்தம் குறைகிறதாம் ! எப்படி வசதி?

Friday, October 15, 2004

உளவியல்,பயிற்றியல் துறைகளில் புதிய செல்நெறிகள் - பகுதி 4

கருத்தாக்க கற்றல் அணுகுமுறைகள்
1.ஆசிரியர் கேள்விகளையும் பிரச்சினைகளையும் முன்வைத்தல். மாணவர்களே சுயமாக விடை காண வழிகாட்டுதல்.
2. மாணவர்களே கேள்விகளை உருவாக்குதல்.
3. குழுவாகச் செயல்படுதல். சகாக்களைத் துணையாகக் கொள்ளுதல்.
4. முன் அனுபவம், முன் அறிவோடு புதிய கருத்துகளை உருவாக்குதல்.
5. உயர்நிலை சிந்தனைத் திறனைப் பயன்படுத்துதல்.
புரிந்து கொள்ளுதலை எவ்வாறு கற்பிக்கலாம் ?
விளக்கம் அளித்தல், பயிற்சி செய்வித்தல், தேர்வு நடத்துதல் மட்டும் புரிந்து கொள்ளுதலைக் கற்பிக்கும் அணுகு முறை அல்ல. புரிந்து கொள்ளுதலைக் கற்பிக்க தேவைப்படும் ஆறு முதன்மைக் கூறுகள்:-
1. சிந்தனைத் திறனை மையமாகக் கொண்ட ஒரு நீண்ட கால கற்றல் முறையை உருவாக்குதல்.
2. ஆண்டு முழுவதும் மதிப்பீடு செய்யும் முறையை அமல்படுத்துதல்.
3. வளமான சான்றுகளுடன் கற்றலை ஆதரித்தல்.
4. நடைபெறும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கவனத்தில் கொள்ளுதல்.
5. பயிலும் துறையில் மாணவர்களை முழு ஈடுபாடடையச் செய்தல்.
6. கருத்துப் பெயர்ப்புகளுக்காகக் கற்பித்தல்.
பரிந்துரைகள் :-
1. பள்ளியிலும் பள்ளிக்குப் புறத்தேயும் தம் சகாக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை வழங்குதல்.
2.ஆசிரியர் மேற்கொள்ளும் செய்முறையை மேம்படுத்த தலைமையாசிரியரின் ஆலோசனையையும் ஆதரவையும் பெறுதல்.
3. ஆசிரியர் கையாளும் புதிய அணுகுமுறைகளைப் பற்றித் தலைமையாசிரியரைத் தவிர்த்துப் பிறர் கருத்துகூறுதல்.
4. ஆதரவு பெறுவதற்கும் புதிய கருத்துகளை உருவாக்குவதற்கும் ஆசிரியர்கள் சமூகத்தின் அங்கமாக இருத்தல்.
5. நடைபெறும் மாற்றங்களுக்கு ஏற்ப கற்பித்தல் அணுகுமுறைகளைப் பரிசோதனை செய்துபார்க்க வாய்ப்பு வழங்குதல்.
6. இவ்வாறு செய்தால் ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தைப் பற்றிய புதிய கருத்துகள் உருவாகலாம். அவருடைய பங்களிப்பில் மாற்றம் ஏற்படலாம்.
7. பங்களிப்பிலும் செயல்பாடுகளிலும் ஏற்படும் மாற்றங்களில் ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள போதுமான அவகாசம் அளித்தல்.
8. ஆசிரியர் பணித்த மேம்பாட்டைக் கற்றலின் மையப் பகுதியாக நெறிபடுத்துதல்.
9. பணித்திற மேம்பாடு நீண்ட கால அடிப்படையில் செயலாக்கம் பெற அரசும் மக்களும் ஆதரவு வழங்குதல்.
முடிவுரை
ஆசிரியர்கள், சமுதாயத்திடமிருந்து பல்வகையான சவால்களையும் எதிர்ப்பார்ப்புகளையும் எதிர்நோக்குகிறார்கள். ஆசிரியர் பயிற்சியில் அறிந்த அணுகுமுறைகளுக்கு மாறாக புதிய முறையில் கற்பிக்க அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். உயர்நிலை சிந்தனைத் திறனை கற்பித்தலில் இணைத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் கருத்தாக்க முறையைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ளுதலைக் கற்பிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். இந்தக் கட்டுப்பாடுகளையும் சவால்களையும் ஆசிரியர்கள் சந்தித்தே ஆகவேண்டும். ஆசிரியர்கள் தொழிலுக்குத் தேவையான அறிவையும் திறன்களையும் நிறைவாகப் பெற வேண்டும். சாதாரண அறிவையும் ஆற்றலையும் பெற்ற ஒருவராக அல்லாமல் சிறப்புத்தன்மை வாய்ந்த ஒருவராக அவர்கள் திகழ வேண்டும்.


குறிப்பு: கட்டுரையாளர்..முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள்.



இடைவேளை..

கனிந்த வணக்கம்.
அன்பு வாசகர்களே... கடந்த ஒரு மாத காலமாக அடியேன் வலைப்பதிவு செய்ய இயலாமைக்கு மிகவும் வருந்துகிறேன். கல்வி தொடர்பான வேலை மற்றும் இதர தவிர்க்க இயலாத பொதுநல ஈடுபாடு இவை யாவும் எம்மைச் சற்று பின்னடைவு செய்து விட்டது!

இனி சரி செய்யும் காலம்.

மீண்டும் வருவேன்,

நன்றி,
வாசுதேவன் இலட்சுமணன்.