குளுவாங்கில் முத்தமிழ் விழா
கனிந்த வணக்கம். தற்போது சற்றேரக்குறைய ஒரு மாத கால விடுமுறையில் இருக்கிறேன். எங்கள் ஜோரான ஜோகூர் மாநிலத்தில், குளுவாங் எனும் ஊரிலிருந்து எழுதுகிறேன்.
ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு வரும் போது, தற்செயலாக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இயல்பாகிவிட்டது. திட்டமிட்ட சில காரியங்களும் உண்டு. அதைப் பற்றி பிறகு குறிப்பிடுகிறேன். எல்லாமே தமிழ், தமிழ்ப்பள்ளி, தமிழாசிரியர்கள் மற்றும் அவை சார்ந்த தொழில் நுட்பம் பற்றியதுதான்.
பினாங்கிலிருந்து குளுவாங்கிற்கு வந்த மறுநாள் ( 23.10.2004) குளுவாங், ஹஜி மானான் தமிழ்ப்பள்ளியில் பத்து பகாட், குளுவாங், மெர்சிங் ஆகிய மூன்று வட்டாரத்தைச் சார்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் போட்டிகளாக முத்தமிழ் விழாவில் நாடைபெற்றது. 'முத்தமிழ் விழா' எனும் இந்நிகழ்ச்சி ஆண்டு தோறும் தலைமையாசிரிகளின் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சியாகும். இதே போன்று ஜோகூரில் பிற மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாவட்டங்களில் முதல் நிலை பெற்ற குழுவோ அல்லது மாணவரோ மாநில முத்தமிழ் விழாவில் கலந்து கொள்வர். அது அனைத்து போட்டிகளுக்கும் ( இசைப்பாடல், திருக்குறள், கதை கூறுதல், கவிதை, கணினி வரைகலை,புதிர், நடனம், நாடகம் போன்றவை ) இறுதிச்சுற்றாகும்.
எம்மை கணினி வரைகலை போட்டிக்கு நீதிபதியாக்கினார் விழா ஏற்பாட்டுக் குழு தலைவரும், பத்து பகாட், குளுவாங், மெர்சிங் வட்டாரத் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் உயர்திரு. கெ.முனுசாமி அவர்கள். அடியேன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அன்றைய நிகழ்வின் நிறைவுக்கு முந்திய அங்கமாக 'தமிழ் மொழியும் பண்பாடும் - ஒரு கண்ணோட்டம்' எனும் கருப்பொருளைக் கொண்ட ஒரு பல்லூடகப் படைப்பும் காண்பிக்கப்பட்டது. அது, தமிழ் செம்மொழி அங்கிகாரம் கிடைக்கப்பெற்ற பின் எழுந்த உத்வேகத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்வேன்.
தமிழ் ஆர்வம், உணர்வுமிக்க தமிழாசிரியர்கள் ஒலி ஒளி காட்சி முடிவுற்றதும் எமக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய தலைமையாசியர் மன்றத் தலைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(பயணம் தொடரும் ..)