.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Wednesday, April 27, 2005

தேசியப் பள்ளிகளில் தமிழ்

தேசியப்பள்ளிகளில் தமிழ்-சீனமொழிப்பாடங்கள் போதிக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஷ்ரீ எஸ்.சாமிவேலு அவர்கள் கருத்துரைத்துள்ளார்:
"தேசியப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழி பாடங்களைப் போதிப்பது நாட்டிலுள்ள பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையுணர்வையும் புரிந்துணர்வையும் மேலும் வலுப்படுத்தும்"
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் தூரநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்ட இம்முடிவை பெரிதும் வரவேற்பதாகவும், மஇகாவின் சார்பில் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆதிக்கு ஓர் அஞ்சலி

" என் பெயரிலேயே
இறந்த பிறகும்
நான் உயிர்ப்பித்திருக்க -
என் எழுத்துக்கள்
ஒரு பத்துப்பேருக்காவது
பயன்படுமானால்
அதுவே என் வெற்றி!"

- ஆதிகுமணன் 20.4.1984ல் எழுதிய ஒரு முன்னுரையிலிருந்து.....

மலேசிய தமிழ்ப் பத்திதிக்கை வானில் முடிசூடா மன்னனாக விளங்கி கடந்த 28.03.2005 - நள்ளிரவு 12.30 மணிக்கு இயற்கை எய்தினார், இளைய தமிழவேள் ஆதிகுமணன்.

மலேசிய நண்பன் நாளிதழின் ஞாயிறு பதிப்பில் -"ஞானபீடம்" வழி இலட்சக்கணக்கான வாசகர்களின் இதயம் கவர்ந்த ஆதிகுமணன் மறைந்து சுமார் ஒரு மாத காலம் ஆகிவிட்டாலும், அவரைப் பற்றிய கவிதாஞ்சலி, இரங்கல் கூட்டம் என நாடு முழுதும் நடைபெற்று வருகின்றது.

நண்பன் பத்திரிக்கையில் ஆதி ஐயா பற்றி வாககர்களின் நினைவலைகள், மலேசியக் கவிஞர்களின் கவிதைகள் சில இங்கு தொகுக்கப்பட்டுள்ளது :

1."1984-ஆம் ஆண்டில் முதன் முதலாக நான் பத்திரிக்கையில் எழுதும்போது எனக்கு ஆறுதல் கொடுத்தவர். ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர்; தைரியம்
கொடுத்தவர்; நிறையப் படியுங்கள்; நிறைய எழுதுங்கள் என்று ஆலோசனை கூறியவர் திரு.ஆதி சார். இந்த மலேசிய மண்ணில் துணிச்சல் மிக்க பத்திரிக்கை ஆசிரியர் என்றால் அது ஆதிகுமணந்தான்.
அஞ்சா நெஞ்சம் படைத்தவர். இலக்கியத்துக்கு ஓர் இலக்கணமாகத் திகழ்ந்தவர். தமிழ் எழுத்துக்கு ஓர் அற்புதமான ஆசிரியர். "பார்வை"யின் வழி
பல மனங்களைக் கவர்ந்தவர். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை."
- திருமதி. எம்.ஜெயா சம்பந்தன், செமினி.

2."தோல்வியில் துவண்டு போய் விடும் வாசகர்களை தட்டி எழுப்பி 'ஞானபீடம்' எனும் ஏணிப்படி வழி மேலே தூக்கிவிட்ட நீங்கள் கொஞ்சம் கூட 'பதில்களில்' களைத்துப் போய் நாங்கள் கண்டதில்லையே!
- கா.செல்வி, பூச்சோங்.

3. வாழும் வரலாறு - காரைக்கிழார்.

கதிருண்டு மதியுண்டு கார்மேக வளியுண்டு
ககனத்தின் வெளியு முண்டு
நதியுண்டு கரையுண்டு நடமாடும் அலையுண்டு
நாண்மீனும் நிறைய உண்டு
புதிருண்டு போனஎன் பொல்லாத வாழ்க்கையில்
புலம்பலும் மிகவே உண்டு
கதியுண்டு எனவந்து கைதந்த குமணாஉன்
கருணைமுகம் எங்கே நண்பா ?

இறப்பொன்றும் புதிதில்லை பிறப்பொன்றும் புதிதில்லை
இயற்கைதான் என்று சொல்வார்!
இறப்போடு பிறப்பிங்கே எல்லார்க்கும் வந்தாலும்
யாரிங்கே வாழ்வை வெல்வார் ?
சிறப்போடு நிலைபெற்ற சிலபேரின் அணியிலே
சேர்ந்த என் அருமை நண்பா
வரப்போடு நீர்பொல வடிகட்டிக் கொண்டேன்உன்
வரலாறு நெஞ்சில் வாழும்!

குறிப்பு: இளைய தமிழவேள் - ஆதிகுமணன் அவர்களின் மறைவு
ஈடுசெய்ய இயலாத இழப்பு! மலேசியத் தமிழர்களின்
இதயங்களில் என்றும் வாழ்கிறார்- தமிழ்ச் சோதியாக....!

Monday, April 25, 2005

நீண்ட இடைவேளை

கனிந்த வணக்கம்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வலைப்பூவில் இணைகிறேன். தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவல் நிறைய உள்ளது. கல்வி தொடர்பான வேலைகளில் மூழ்கி விட்டேன். தொடர்ந்து பரீட்சை காலம் வேறு வந்ததால் வலைப்பூவிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டேன். அனைவருக்கும் 'பார்த்திப' புத்தாண்டு வாழ்த்து கூறி சற்றே விடைபெறுகிறேன்.

அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்.