ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மாணவர் புறப்பாடப் பணி முகாம்.
குளுவாங் பட்டணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் இருக்கும் ரெங்கம் (ஊரின் பெயர்) தமிழ்ப்பள்ளியின் மாணவர் புறப்பாடப் பணி முகாம் அக்டோபர் 30 & 31 இல் பள்ளி வளாகத்திலே நடைபெறுகிறது. இன்று பிற்பகல் சுமார் 2 மணி அளவில் தொடங்கிய பணி முகாமில் சுமார் 80 மாணவ மாணவிகள் பங்கெடுக்கின்றனர். அவர்கள் படிநிலை 2 ( ஆண்டு 4,5 & 6 ) உட்பட்ட மாணவர்களாவர்.
புறப்பாட நடவடிக்கைகளில் ஒன்றான இப்பணி முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ரெங்கம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் ஆதரவில் நடைபெறும் இப்பணி முகாமை திறந்து வைக்க EBOR Research Centre (CEP Rengam) - சி.இ.பி ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குநர், திரு.R.கிருஷ்ணன் அழைக்கப்பட்டுள்ளதாகப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கெ.முனுசாமி அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வு இன்று இரவு 8.00 மணிக்கு திறப்பு விழா காணவிருக்கின்றது.
தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் நலன் கருதி சில தனியார் நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு தந்து கணிசமான நிதியுதவியும் செய்து வருவதாக பணி முகாம் பொறுப்பாளர் திரு.A.முரளி கூறினார்.
இம்முகாம் சிறப்பாக நடைபெற பள்ளியின் 20 ஆசிரியர்களும் , மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்க டத்தோ ஹசி ஹஸான் யூனோஸ் ( SMK Dato Hj.Hassan Yunus ) இடைநிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர் 10 பேர் கலந்து சிறப்பிக்கிறார்கள்.
இப்பணி முகாமின் நோக்கங்கள் மூன்று : அவை யாதெனில் , மாணவர்கள் நடைமுறை பிரச்னைகளை எதிர்கொள்ள சுயகாலில் நிற்கும் திறன் அடைதல், காலம் தவறாமல் நடவடிக்கைகளில் பங்கெடுத்து சிறப்பாக செய்து முடித்தல் மற்றும் மாணவர்களின் கட்டொழுங்கை நிலைநாட்டுதல் ஆகும்.
பணி முகாமில் மாணவர்கள் கூட்டுமுயற்சியில் கூடாரம் அமைத்து, சுயமாக சமைத்து, போட்டிகளில் கலந்து, தடைகளை வென்று, மனவுறுதி ஏற்பட நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொறுப்பாசிரியர் திரு.D.வாசு அவர்கள் தெரிவித்தார்.
( மேலே படங்களில்,மாணவர்கள் இன்று மாலை பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பணி முகாம் நடவடிக்கைகளில் ஆர்வமுடம் கலந்து கொள்வதைப் பார்க்கலாம் )