.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, October 30, 2006

ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மாணவர் புறப்பாடப் பணி முகாம்.குளுவாங் பட்டணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் இருக்கும் ரெங்கம் (ஊரின் பெயர்) தமிழ்ப்பள்ளியின் மாணவர் புறப்பாடப் பணி முகாம் அக்டோபர் 30 & 31 இல் பள்ளி வளாகத்திலே நடைபெறுகிறது. இன்று பிற்பகல் சுமார் 2 மணி அளவில் தொடங்கிய பணி முகாமில் சுமார் 80 மாணவ மாணவிகள் பங்கெடுக்கின்றனர். அவர்கள் படிநிலை 2 ( ஆண்டு 4,5 & 6 ) உட்பட்ட மாணவர்களாவர்.

புறப்பாட நடவடிக்கைகளில் ஒன்றான இப்பணி முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ரெங்கம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் ஆதரவில் நடைபெறும் இப்பணி முகாமை திறந்து வைக்க EBOR Research Centre (CEP Rengam) - சி.இ.பி ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குநர், திரு.R.கிருஷ்ணன் அழைக்கப்பட்டுள்ளதாகப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கெ.முனுசாமி அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வு இன்று இரவு 8.00 மணிக்கு திறப்பு விழா காணவிருக்கின்றது.

தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் நலன் கருதி சில தனியார் நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு தந்து கணிசமான நிதியுதவியும் செய்து வருவதாக பணி முகாம் பொறுப்பாளர் திரு.A.முரளி கூறினார்.

இம்முகாம் சிறப்பாக நடைபெற பள்ளியின் 20 ஆசிரியர்களும் , மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்க டத்தோ ஹசி ஹஸான் யூனோஸ் ( SMK Dato Hj.Hassan Yunus ) இடைநிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர் 10 பேர் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

இப்பணி முகாமின் நோக்கங்கள் மூன்று : அவை யாதெனில் , மாணவர்கள் நடைமுறை பிரச்னைகளை எதிர்கொள்ள சுயகாலில் நிற்கும் திறன் அடைதல், காலம் தவறாமல் நடவடிக்கைகளில் பங்கெடுத்து சிறப்பாக செய்து முடித்தல் மற்றும் மாணவர்களின் கட்டொழுங்கை நிலைநாட்டுதல் ஆகும்.

பணி முகாமில் மாணவர்கள் கூட்டுமுயற்சியில் கூடாரம் அமைத்து, சுயமாக சமைத்து, போட்டிகளில் கலந்து, தடைகளை வென்று, மனவுறுதி ஏற்பட நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொறுப்பாசிரியர் திரு.D.வாசு அவர்கள் தெரிவித்தார்.

( மேலே படங்களில்,மாணவர்கள் இன்று மாலை பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பணி முகாம் நடவடிக்கைகளில் ஆர்வமுடம் கலந்து கொள்வதைப் பார்க்கலாம் )

Wednesday, October 25, 2006

குழந்தைக் கவிஞர்- அழ.வள்ளியப்பா

திரு அழ.வள்ளியப்பா எனும் கவிஞரைப் பற்றி முழுமையாக அறியும் முன்னே அவர் எழுதிய சிறுவர்களுக்கான கவிதைகளைப் படித்திருக்கிறேன். தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு ( 12 வயது ) இறுதியில் என்னைத் 'தலைச்சிறந்த மாணவன்' என்று தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினார்கள். எனக்குக் கிடைத்த பரிசு - 'மலரும் உள்ளம்' எனும் சிறார் கவிதைப் புத்தகம். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள்தான் எழுதியிருந்தார்.

கவிஞரின் நடை; இனிய சொற்கள்; உயர்ந்த கருத்துக்கள் இவையாவும் அவரது படைப்புகளில் காணலாம்.

இயல்பாகவே அவரது கவிதைகளைப் படிக்கும் சிறுவர்கள் கவிநயத்தில் அல்லது சந்தச் சொற்களில் ஈர்க்கப்படுவர். குழந்தைகளின் வயதையும், அவர்களது மனப் போக்கையும் நன்கு அறிந்தவர்களால் மட்டுமே குழந்தைகளுக்கான கவிதையைப் புனைய முடியும்! திரு. வள்ளியப்பா அவர்களுக்கு இக்கலை கைவந்தது என்றால் மிகையாகாது.

சொல்லப்போனால், கவிஞரின் குழந்தை உள்ளத்தில் மலர்ந்தவை அவரது கவிதைகள். இவற்றில் இயற்கையின் அழகைக் காட்டுகிறார்; நன்னெறிப் பண்புகளைப் புகட்டுகின்றார்; உயிர்களிடத்தில் அன்பு வைக்கும்படி கூறுகிறார். அதோடு மாத்திரமல்லாமல் மேலான உயர்ந்த எண்ணங்களைக் குழந்தைகளின் மனத்திலே ஆழமாகப் பதிய வைத்து விடுகிறார்.

'உலக வாழ்விற்கு அன்பு இன்றியமையாதது என்னும் உண்மையைப் பலவாறாகப் பாடியுள்ளனர்'. இவ்வுண்மையைக் குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் கவிதை இயற்றியுள்ளார் இக்கவிஞர். சிறுபிள்ளைகள் பார்த்து அறிந்த நகைகளையும், மலர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு படுத்தி இறுதியாக, அன்பின் நலன்களைக் கூறுகிறார்:

பட்டை போடப் போடத்தான்
பளப ளக்கும் வைரமே;
மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினுமி னுக்கும் தங்கமே;
அரும்பு விரிய விரியத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே;
அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே!

இன்றை நாளில் உலக மக்களை அல்லற்படுத்தும் (அணு ஆயுத) போர் முதலிய பல்வேறு நாச வேலைகள் ஒழிந்து, அமைதி நிலவ வேண்டுமென்றால் 'அன்பு' என்னும் மக்கட் பண்பு இவ்வுலகில் பெருக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கவிஞர். இன்றைய சூழலுக்கும் வெகுவாய்ப் பொருந்துகிறது பாருங்கள்!

நன்றி "மலரும் உள்ளம்" -குழந்தைப் பாடல்கள், ஒன்பதாம் பதிப்பு: செப்,1975

Friday, October 13, 2006

பற்றிவிடு மோனத்தை!

உள்ளும் புறமும் இருளகற்ற
பற்றவை தீபத்தை!
ஒளிரும் நயனம் பரப்பும்
மோன மிச்சத்தை!

நம் இதயம் இருட்டாகிக் கிடப்பதை எப்போது உணர்கிறோம்? எப்போது கடைசியாய் இது பற்றிச் சிந்தித்தோம்? இதில் அறிவு மின்னலாய்ச் சுருங்கிப்போனது. அறிவின் தன்மை பற்று வைப்பதுதானே. அறிவை அறிய முயன்றதுண்டா? வாலறிவு படைத்ததை எதனுடனாவது ஒப்பிடலாகுமா?
நினைத்தது கிடைக்கவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை;கிடைத்ததில் மகிழ்வோம்! மனதை சாட்சி வைப்போம். எது நிரந்தரமோ அதுவே ஆனந்தம்.எது ஆனந்தமோ அது வீடு. இப்போதே விட்டு விடு கவலை முட்டைகளை! தட்டி விடு சுந்தரச் சிந்தையை! அவன் அருளாலெ அவன் தாள் வணங்கு. அறிமுகமாகும் மோனவெளி. இடைவிடாது பற்ற வேண்டியது மோனத்தை மட்டுமே!