.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, May 31, 2005

அமெரிக்க இந்தியப் பழங்குடி மக்களின் பிரார்த்தனை!

ஒஜிப்வா - அமெரிக்க இந்தியப் பழங்குடி மக்களின் பிரார்த்தனை!

எங்களின் அருமையான மூத்த பெரியவரே!
உடைந்து உருக்குலைந்து இருக்கும் எங்களைப்பார்.

இறைவனின் படைப்பில் உள்ள
எல்லாவற்றிலும் மனித இனம் மட்டுமே
பிரபஞ்சப்பாதையிலிருந்து விலகிச் செல்கிறது.

இது எங்களுக்கு நன்றாகத் தெரிகிறது.
அதிலிருந்து பிரிந்து நிற்கிறோம், அறியாமையால்.

பிரபஞ்சத்தின் தெய்வீகப் பாதையில் மீண்டும் நடக்க
நாங்கள் தான் ஒன்றுசேர வேண்டும்.

எங்கள் மூத்த தாத்தாவே!
நீங்கள் புனிதமானவர்; தெய்வீகம் நிறைந்தவர்;
அன்புடனும் கருணையுடனும் நாங்கள் பெருமையோடு
வாழக் கற்றுக் கொடுங்கள்.

பிறந்த பூமியின் காயங்களை குணப்படுத்த வேண்டும்.
பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குணப்படுத்த
மருந்து தடவ வேண்டும்.

குறிப்பு: நன்றி: 'தன்னை அறியும் அறிவு' (டாக்டர் எம்.எஸ்.உ) ..எனும் புத்தகத்திலிருந்து.

துன் அமினா தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்புகள்


சில பத்தாண்டுகளுக்கு முன்பு, தமிழ்ப்பள்ளிகளில் கணினிப் பயன்பாடு என்பது நடைமுறையில் இல்லை. அப்படியே இருந்தாலும் அது பள்ளி நிர்வாக நடவடிக்கைக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. ஆயினும் இப்போது பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் கணினிக்கூடங்கள், மையங்கள் தென்படுகின்றன. மாணவர்களுக்கு அடிப்படை கணினி மற்றும் தொழில் நுட்பத்தைப் போதிக்க அரசாங்கமும் சில தமிழ்ப்பள்ளிகளுக்கு கணினி மையங்களை அமைத்திருக்கின்றது. அவ்வப்போது ம.இ.கா தலைவர்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், மற்றும் தமிழ்ப்பற்று மிக்க தொழில் அதிபர்கள் இலவசமாக சில கணினிகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

இடம், கணினி வசதி எல்லாம் இருந்தாலும் தகவல் தொழில் நுட்பத்தைப் போதிக்க ஆசிரியர்கள் இல்லை. தன்னார்வம் கொண்ட சில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தலைமையாசிரியரின் வழிகாட்டுதலுக்கிணங்க கணினி வகுப்புகளை 'புறப்பாட நடவடிக்கையாக' போதிக்கின்றனர். ஏனெனில், தமிழ்ப்பள்ளிகளுக்காக பிரத்தியேக கணினி பாடத்திட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை!

பள்ளிப் பாட நேரத்திலேயே கணினி வகுப்புகளை - ஆண்டு 1 முதல் 6 வரை - உள்ள மாணவர்களுக்கு நடத்துவது என்பது விவேக முயற்சி! அவ்வாறு போதிக்கும் ஆசிரியர்களுக்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சம்பளமும் வழங்கி வருகின்றது என்பது பாராட்டக்கூடிய ஒன்று. ஜொகூர் மாநிலத்தில் சில தமிழ்ப்பள்ளிகள் இம்முயற்சியில் ஈடுபாடு காட்டுவது வரவேற்கத்தக்கது. அப்பட்டியலில் துன் அமினா தமிழ்ப்பள்ளியும் இடம்பெற்றிருக்கிறது.

அப்பள்ளியின் கணினி மையத்தில் 38 கணினிகள் உள்ளன. பகுதி நேர ஆசிரியர்களாக தற்போது இருவர் பணியாற்றுகின்றனர். வாரத்தில் சராசரி 1 மணி நேரப் பாடமாக ஆண்டு 1 முதல் 6 வரை பள்ளி நேரத்திலேயே போதிக்கப்படுகின்றது. 'சுமார் 5 ஆண்டுகளாக குமாரி வள்ளி என்பவர் கணினி ஆசிரியராகவும் தற்போது ஆசிரியர் ராஜசேகர் சில மாதங்களாக உதவியாகவும் இருக்கின்றார்", என்று அப்பள்ளியின் ஆசிரியர் திரு சுலைமான் அவர்கள் தெரிவித்தார். பெ.ஆ.சங்கத்தின் ஆதரவில் தற்போது சுமார் 8,000 ரிங்கிட் செலவில் கணினி மையம் புதிய தோற்றம் காண ஏற்பாடுகள் செய்து வருவதாக ஆசிரியர் திரு ராஜசேகர் தெரிவித்தார்.

Wednesday, May 25, 2005

பொது நலச் சேவையில் துன் அமினா தமிழ்ப்பள்ளி முன்னுதாரணம்!



Sumbangan Makanan Kering - Sempena Sambutan Hari Guru Peringkat N.Johor 2005.
SJK(T) Tun Aminah, Skudai, Johor.


ஜொகூர் மாநிலத்திலேயே அதிக மாணவர் எண்ணிக்கையைக் ( 1400 மாணவர்கள் ) கொண்ட தமிழ்ப்பள்ளியாகத் திகழும் துன் அமினா தமிழ்ப்பள்ளி இன்று பள்ளி வரலாற்றில் இடம்பெறத் தகுந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

பேறு குறைந்த மாணவர்களுக்காகவும் மற்றும் சுமார் 8 அனாதை இல்லங்களுக்கும் ( )- உணவுப் பொருட்களைத் திரட்டி சம்பந்தப்பட்ட இயக்கங்களுக்கு வழங்கியிருக்கிறது. போற்றத்தகுந்த இந்நிகழ்வு இன்று காலை ( 25.05.2005 ) அப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டக் கல்வி இலாக்கா துணை அதிகாரி உயர்திரு அனாஃவி அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளர் திரு. லக்க்ஷ்மண ராவ் அவர்கள் " முதன் முறையாக ஒரு தமிழ்ப்பள்ளி மாநில அளவிலான 'ஆசிரியர் தின' நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக 'சமூக மனப்பான்மையுடன்' இந்நடவடிக்கையை ஏற்று நடத்துகிறது" என்றார். மேலும் அவர், " எங்கள் முயற்சிக்கு ஜொகூர் வட்டாரத்திலுள்ள சுமார் 216 ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகள் துணை வந்தன. தேசிய வகை மலாய், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் நல்லெண்ண நோக்குடன் சமூக அக்கரையுடன் ஆதரவு நல்கியது உண்மையிலேயே வரவேற்கத்தகுந்தது" என்று கருத்துரைத்தார்.

ஆசிரியர்கள் பணி கற்றல் கற்பித்தலோடு நிறைவு பெறுவதில்லை. பள்ளி சூழலுக்கு அப்பால் சமூக நலன் மற்றும் பொதுச் சேவை மனப்பான்மை - இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் வழி வலுப்படுத்த ஏதுவாகிறது. சிறந்த ஆசிரியர்கள் சீரிய நற்காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். 63 ஆசிரியர்களைக் கொண்ட துன் அமினா தமிழ்ப்பள்ளியை தலைமையாசிரியர் திருமிகு. கெ. பூபாலன் பி.ஐ.எஸ் அவர்களின் சீரிய தலைமைத்துவத்தில் இயங்கி வருகிறது.

குறிப்பு: மேலே படத்தில் இடம் இருந்து வலம், ஆசிரியர் திரு சுலைமான் மொய்டீன், திருமிகு கெ. பூபாலன் பி.ஐ.எஸ் ( தலைமையாசிரியர் ), ஆசிரியர் திரு. லக்க்ஷ்மண ராவ்.

Saturday, May 21, 2005

'சிந்தனை ஆற்றல்' கொண்ட மாணவர்களை உருவாக்குதல்

தேசிய ரீதியிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் இவ்வாண்டு நீலாய், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள் அதிகாரப்பூர்வமாத் தொடக்கி வைத்தார். நாடு முழுவதும் இருந்து சுமார் 4,000 ஆசிரியர்கள் ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்டனர்.

'சிந்தனை ஆற்றல்' மிக்க மாணவர்களின் படைப்பாக்கமும் செயல்திறனும் நாட்டிற்கு வருங்காலத்தில் முக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுவதால் அத்தகைய மாணவர்களை உருவாக்கும் சவாலை தற்போது ஆசிரியர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர் என்று துணைப் பிரதமர் தமதுரையில் கூறினார்.

ஒரு சிறந்த மாணவனை கல்வி வழி உருவாக்குவது மட்டுமல்ல ஆசிரியரின் பொறுப்பு, மாறாக, எந்த பிரச்னையையும் மதிநுட்பம் கொண்டு சீர்தூக்கிப் பார்த்து ஆழ்ந்த சிந்திக்கும் ஆற்றல் கொண்டு செயல்படுத்தும் வல்லமை பெற்று நாட்டுப்பற்று மிகுந்த குடிமகனாய் உருவாக்கும் கடப்பாட்டையும் ஆசிரியர்கள் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இலக்கை அடைய ஆசிரியர்கள் இவ்வாண்டின் ஆசிரியர் தின கருப்பொருளான " தரமான ஆசிரியர்கள், மேன்மைக்கான வித்துகள்" என்பதை மனதில் சவாலாகக் கொண்டு பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் ஆசிரியர்களே மாணவர்களின் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். சிறந்த மாணவர்களைக் கல்வி கேள்விகளில் திறம்பட உருவாக்குவதில் இதுவரை ஆசிரியர்கள் சிறந்த நற்சேவையாற்றியுள்ளனர் என்று பாரட்டினார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கு ஈடாக தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்படுகிறது என்றார் துணைப் பிரதமர்.

அந்நிகழ்வில் துணைப் பிரதமர் " ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச பாடப் புத்தகங்கள் இயல்பாகவே வழங்கப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுதும் உள்ள சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மன நிறைவை எற்படுத்துவதாக இருக்கும்.

Tuesday, May 17, 2005

ஆசிரியர் தினம்


நேற்றுதான் பினாங்கிலிருந்து குளுவாங்கிற்கு வந்தேன். பள்ளிக்குச் செல்ல வேண்டும்; இன்று ஆசிரியர் தினம்! கைத்தொலை பேசியில் வாழ்த்துக் குறுந்தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன,அதில் ஒன்று இப்படி வந்தது ...,
"Without Teachers --days are "Sadday, Moanday,Tearsday, Wasteday, Thirstday, Fightday, Shatterday" so happy TEACHERS DAY!
இன்னொரு குறுந்தகவல்....."Bad teacher complains; Good teacher explains; Better teacher demonstrates, .."Best teacher motivates; Great teacher inspires...HAPPY TEACHER'S DAY ".
குளுவாங் பட்டணத்திலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ள ரெங்கம், தேசிய வகை தமிழ்ப்பள்ளி சென்றடைந்தேன். நான் அப்பள்ளியில் பணியாற்றும்போது இருந்த முன்னால் மாணவர்கள் ( தற்போது இடைநிலைப் பள்ளியில் பயில்கிறார்கள் ) என்னைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்தனர். அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதான்.

சக ஆசிரிய நண்பர்களும் சேர்ந்து குசலம் விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் 'ஆசிரியர் தின வாழ்த்துக்கள்' தெரிவித்தேன். பிறகு பள்ளி தலைமையாசிரியர் அவர்களைச் சந்தித்து என் வாழ்த்தினைக் கூறினேன். "இன்று ஆசிரியர் தினச்சிறப்பு கூட்டம் இருக்கிறது. தவறால் நீங்களும் கலந்து கொள்ளுங்கள், வாசு" என்று தலைமையாசிரியர் தெரிவித்தார்.

கூட்டத்தின் போது போட்டியில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திரு. முரளிஅவர்கள், தலைமையாசிரியருக்குப் 'பொன்னாடை' போற்றி சிறப்பு கௌரவிப்பு செய்தார். பள்ளி தலைமையாசிரியரும் குளுவாங் வட்டார தலைமையாசிரியர் மன்றத் தலைவர் உயர்திரு கெ.முனுசாமி அவ்ர்களின் அரிய முயற்சியால் ரெங்கம் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்துடன் கம்பீரமாகத் திகழ்கின்றது. பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அவருக்கு மிகச் சரியான கௌரவிப்பு என்றால் அது மிகையாகாது.

மூத்த ஆசிரியர்கள்( முன்னால் தலைமையாசிரியர்கள்) திருமதி. மகேஸ்வரி ஆசீர்வாதம், திரு. வெங்கடேசன் பிள்ளை, திரு.இராமமூர்த்தி அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

பி.கு:-மேலே படத்தில்..ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு. கெ.முனுசாமி அவர்களுடன் மூத்த ஆசிரியை ( முன்னால் தலைமையாசிரியர் ) திருமதி மகேஸ்வரி ஆசீர்வாதம் அவர்கள்

Tuesday, May 03, 2005

பேரா மாநில - வளர்தமிழ் விழா 2005

கடந்த சனிக்கிழமை ( 30.04.2005 ) பீடோர் இடைநிலைப்பள்ளியில் பேரா மாநில ரீதியில் நடைபெற்ற வளர்தமிழ் விழா 2005 - நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்பதை எதிர்பாரா சம்பவம் என எடுத்துக் கொள்ள வெண்டியதுதான்.
பேரா மாநில கல்வி இலாகாவின் ஆதரவோடு பத்தாங் பாடாங் மாவட்ட தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளின் தமிழ்மொழிப்பாடக் குழுவினர் ஏற்பாட்டில் போற்றத்தகுந்த வகையில் 'வளர்தமிழ் விழா - 2005' திகழ்ந்தது. இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம், பேரா மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினரும் மாநில ம.இ.காவின் தலைவருமாகிய மாண்புமிகு டத்தோ கோ.இராஜு அவர்களின் வருகையும் திறப்புரையும் திகழ்ந்தது.

அன்றைய நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

(நேரம் - காலை)
8.00க்கு - பதிவு
8.30க்கு - சிற்றுண்டி
8.45க்கு - நீதிபதிககள் , போட்டியாளர்களுக்கான விளக்கவுரை
9.00க்கு - தமிழ் வாழ்த்து ( திரு.P.பிரகாஷ் - SJKT Tun Sambanthan, Bidor)
9.05க்கு - வரவேற்புரை : திரு.கி.இரவி பிபிடி ( ஏற்பாட்டுக்குழுத் தலைவர்)
9.10க்கு - தலைமையுரை : திரு.சா.சாமிகண்ணு ( மாநில கல்வி
இலாகா தமிழ்ப்பிரிவின் சிறப்பதிகாரி)
9.20க்கு - திறப்புரை : மாண்புமிகு டத்தோ கோ.இராஜு
9.30க்கு - போட்டிகள் ஆரம்பம் ( தொடக்க , இடைநிலைப்பள்ளி
மாணவர்களுக்கானது )
அ) மேடை பேச்சு ( த. நீதிபதி - திரு.M.முனியாண்டி )
ஆ) கட்டுரை வரைதல்( த. நீதிபதி - திரு.ச.முருகையா PPT )
இ) புதிர்ப் போட்டி ( த. நீதிபதி - திருமதி ஓவியச் செல்வி )
ஈ) கதை சொல்லுதல் ( த.நீதிபதி - குமாரி செம்பகம் )
10.30க்கு- இலக்கியவுரை : "செம்மொழி"
படைப்பு : இலக்கியவான் சீனி நைனா முகமது
12.00க்கு- நிறைவு உரை : துவான் சயிட் பின் மானாப்
( மாவட்ட கல்வி இலாகா அதிகாரி )
12.15க்கு- நன்றியுரை : திரு. கே.பெருமாள் ( பாத்தாங் பாடாங் மாவட்ட
தமிழ்மொழி - தொடக்கப் பள்ளி பாடக்குழுத் தலைவர் )
12.30க்கு - பரிசளிப்பு
1.00க்கு - மதிய உணவு.

திறப்புரை ஆற்றுகையில், மாண்புமிகு டத்தோ இராஜு அவர்கள்: 'தமிழ்ப்பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவது நமது கடமை' என்றும் தேசியப் பள்ளிகளுக்கு ( Sek. Kebangsaan ) தமிழ் மாணவர்களை அனுப்புவதால் பாதிப்பு இருக்கிறது' என்றும் வெளிப்படையாகக் கூறினார்.

ம.இ.காவின் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு வாரியம் வழி தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு கட்சி ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவாதாகவும் கூறினார். இனி,தமிழ்ப்பளிகளின் கட்டடப் பிரச்னைகளைத் தீர்க்க 'தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்கு நாமே ஏற்பாடு செய்ய வேண்டும்' எனவும் கருத்துரைத்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவர்- திரு.கி.இரவி அவர்கள், 'தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளி தமிழ் மாணவர்களின் தமிழ்மொழி வளம், தமிழ்மொழிப் பற்று, மொழியாளுகை, சிந்தனைத் ததிறனை வளப்படுத்தும் நோக்கத்தை' அடிப்படையாகக் கொண்டு இவ்விழா நடத்தப்படுவதாகக் கூறினார். பேரா மாநிலத்திலுள்ள 9 மாவட்டங்களைப் பிரதிநிதித்து மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக மாவட்ட அளவில் ஏற்கனவே போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவர்கள் - மாநில ரீதியில் போட்டியிட்டனர். அதே வேலையில், பல மாவட்டங்களிலுள்ள தமிழாசிரியர்களை ஒன்று கூட்டவும், சந்தித்து கலந்துரையாடவும் இவ்விழா வகை செய்கிறது என்றும் அவர் கருத்துரைத்தார்.

குறிப்பு: நிகழ்வு மிக நேர்த்தியாக வழிநடத்தப்பட்டது. வரவேற்பு மண்டபத்தில் தோரணமும், இரு தூண்களில் வாழை மரமும்
கட்டப்பட்டிருத்தது, தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தது. ஏற்பாட்டாளர்களின் சீரிய
முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் ஜோரான ஜொகூர் மாநிலத்தில் இது போன்ற நிகழ்ச்சியை 'முத்தமிழ் விழா' வாகக் கொண்டாடுவோம். ஜொகூர் மாநிலத்தில் அதுவும் எங்கள் 'சா'ஆ' ஊர் ஆளை - எம் துறை சார்ந்த நண்பரை ( திரு. K. சந்திர மோகன் - பட்டதாரி ஆசிரியர்) சந்திப்பேன் என்று எண்ணவில்லை. மேலும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ' senior' அன்பர்கள் சிலரை ( பட்டதாரி ஆசிரியர்கள் திரு. V.வேலாயுதம் -SJKT Slim River , திரு. S.தேவதாஸ் - SMK Dato Panglima, Perang Kiri, Perak ) சந்தித்து கலந்துரையாடியதும் மகிழ்ச்சி அளித்த கணங்களாகும். மேலும் ஆரம்பத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அன்புடன் வழிகாட்டிய, ஆசிரியர் திரு.கா. தியாரன் -SJKT Ldg. Sg. Kruit, Batang Padang, அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

அவர்களுடனான 'தமிழ்ப்பள்ளி' பற்றிய கலந்துரையாடலை அடுத்த பதிவில்
எழுதுகிறேன். மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
USM,Penang.