.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, January 24, 2006

உள்நோக்கியப் பயணம் உங்களை விழிப்படையச் செய்யும்!


'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற'..( குறள்: 34 )


'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பது சான்றோர் வாக்கு. உண்மையொளி உதிக்கும் இடமும் உள்ளம்தான். வெளியில் தோன்றும் யாவும் உள்வெளிப்பாடுதான் என்பதை சித்தர் பாடல்....

'அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே!"
...கூறுகிறது.

அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க ஓடுகிறோம்; வெளிநோக்கியப் பயணத்தில்.நவீன வாழ்க்கையின் கவர்ச்சி நம்மை அதிவேகமாக ஓட வைக்கிறது -- இலக்கை நோக்கி. ஒரு வகையில், இவ்வெளிநோக்கியப் பயணத்தில் பழகிவிடுகிறோம். காலவோட்டத்தில் இது இயந்திரத்தனமான வாழ்க்கைப் பயணமாகிறது.

காலையில் எழுந்தது முதல், இரவு நித்திரை கொள்ளும்வரை எல்லாமே விரைவு, வேகம், அவசரம் எனும் சார்புடைய சொற்களில் வாழ்க்கை அடங்கிவிட்டதோ! என்று எண்ணத் தோன்றுகிறது. பல வேளைகளில் அளவுக்கு அதிகமான வெளி விசயங்களில் மூழ்கித் தவிக்கிறோம். நிலை தடுமாறி விழவும் செய்கிறோம். உள்ளம் உறுதி பெற்றவர் எழுகிறார்; தடுமாற்றம் அடையும் பலர் மீள முடியாமல் தவழ்கிறார். சிக்கல் ஏற்பட்ட உள்ளம் தளர்ச்சியடைகிறது. அதனால் விரக்த்திக்குள்ளாகின்றனர், பலர். அவர்கள் பார்வைக்கு 'வழ்க்கைப் பாதை' மங்கலாகத் தெரிகிறது. அலை போல் வரும் பிரச்னைக் கடலில் தத்தளிக்கின்றனர்.

இவற்றுக்கெல்லாம் தீர்வு ஏதும் உண்டா..? என்று நெஞ்சம் விம்முகிறது; ஓசை எழாமல் உள்ளுக்குல் அழுகிறது.

எங்கிருந்து வெளிநோக்கியப் பயணத்தைத் தொடர்ந்தார்களோ -- அங்கிருந்தே வருகிறது தீர்வு காணும் நல்வழி --- சரியான பாதையைக் காண்பிக்கிறது -- ஆறாம் அறிவாகிய 'மனம்'. எவ்வாறு ?
ஆன்மீகப் பயணமாக.....உள்நோக்கியப் பயனத்தில்.

அங்கிங்கெனாதபடி...உள்ளத்தில் -- மனதின் மையத்தில் இருக்கிறது -- அற்புதமான விசை!
அது கொஞ்சம் தூசு படிந்திருக்கிறது. தட்டுங்கள் மன விசையை! அபரிதமான அற்றல் வெளிப்படும்.

மெய்ஞ்ஞான உணர்வுக்கு வழிகாட்ட உள்நோக்கியப் பயணம் அவசியம்! நல்வாழ்வுக்கு சுடர் ஏற்றி -- உள்ளொளியைக் காட்டவே உள்நோக்கியப் பயணம். உயர் பண்பை வளப்படுத்தி வாழ்க்கையின் தாத்பரியத்தை உணர்த்தவே உள்நோக்கியப் பயணம்.

மன சாந்தி - அமைதி - பேரானந்த நிலை இவற்றில்தான் வாழ்வின் உன்னதம் பொதிந்துள்ளது. யதார்த்த வாழ்வின் இலக்கு -- இலட்சியம் முக்கியம்தான். அதற்கு, போகின்ற பாதை 'சுமை' குறைந்ததாகவும் அன்றாட நிகழ்வுகள் 'சுவை'நிறைந்ததாகவும் அல்லவா இருக்க வேண்டும்!

அவ்வாறு மாற்றி அமைப்பதற்கான ஒரு சூட்சும விசை நம் மனதில் இருப்பதை அறிந்து, உணர்ந்து தெளிவோம். வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோம்!

எனவே....வாருங்கள் 'மனத்துக்கண் மாசிலன்' ஆவோம்.


அன்புடன்,

எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.

Tuesday, January 17, 2006

நேர்மை இல்லாதவன் பிளவுபட்ட மனிதன்!


எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒன்றாக இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்? நேர்மை இல்லாதபோது நாம் பிளவு பட்டவராகிறோம்.We become split personalities.நம் மதிப்பீடுகள் போல், எண்ணம் போல், சொல் இல்லாதபோது எண்ணுபவருக்கும்,பேசுபவருக்கும் இடையே பிளவு ஏற்படுகிறது.எண்ணம் போல் செயல் இல்லாதபோது எண்ணுபவருக்கும், செயல்படுபவருக்கும் இடையே பிளவு ஏற்படுகிறது.அம்மாதிரியே சொல்வது போல் செயல்படாவிட்டால் பேசுபவருக்கும் செயல்படுபவருக்கும் இடையே பிளவு ஏற்படுகிறது.இப்படி நம்மிடம் பிளவுகள் ஏற்படும்போது மனம் அமைதி இழக்கிறது. நம் மனதில் குற்ற உணர்வுகளும் சுய வெறுப்பும் உண்டாகின்றன. நம்மை நாமே நம்ப முடியாமல் போகிறது.

இம்மாதிரியான மனம் எந்தவிதமான கல்வியைப் பெறுவதற்கும் தகுதியானதல்ல. எதை சாதிப்பதற்கும் தகுந்ததல்ல!


குறிப்பு:
நன்றி, 'தர்மத்தின் மதிப்புதான் என்ன?'- ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி.

Sunday, January 15, 2006

அறிவியல் பல்கலைக்கழகத்தில் 'பொங்கல் விழா 2006'


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்".


என திருவள்ளுவர் கூறியுள்ளார்.

இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தவர்கள் பழந்தமிழர்கள். நம் முன்னோர் பெரும் மகிழ்ச்சியோடும் மிகச் சிறப்பாகவும் கொண்டாடிய விழாக்களில் பொங்கல் விழாவும் ஒன்று. தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழிக்கொப்ப தைமாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா தமிழர் வாழ்வில் தனிச்சிறப்பைக் கொண்டது.

மலேசியாவில் பொங்கல் விழா:

நேற்று நாடு தழுவிய அளவில் மலேசிய தமிழர்கள் பொங்கல் விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புலம் பெயர்ந்த தமிழர்களில் மலேசியத் தமிழர்களும் தொடர்ந்து பண்டைய தமிழகத்தின் பண்பாட்டின்படி அறுவடைத் திருவிழாவாகவும், புதிய நற்காரியங்களைத் தொடங்குவதற்கான ஒரு மங்கள நாளாகவும் கொண்டாடி வருகின்றனர்.

ஐயாயிரம் ஆண்டுகள் பெருமை வாய்ந்த அறுவடைத் திருநாளான பொங்கலை மலேசிய பாணியில் கொண்டாடுமாறு இந்திய சமூகத்தினரை ம.இ.கா வின் தேசியத் தலைவரும் பொதுப்பணி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் முன்னதாக வானொலியில் சிறப்பு பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

" இது போன்ற நிகழ்வுகளின் வழியாகத்தான் நாம் இந்தியர்களின் பாரம்பரியத்தை பிற இனங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்!" என அவர் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கலிடும் போட்டி:


அக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் - இந்திய பண்பாட்டுக் கழகத்தினர் பிற இன மாணவர்களைக் கவரும் வகையில் "பொங்கலிடும் போட்டி" ஏற்பாடு செய்தனர்.
முதன் முறையான முயற்சி என்றாலும் பிற இன மாணவர்கள் குறிப்பாக மலாய்க்காரர்கள் மற்றும் சாபா மாநிலத்தினர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கினர்.

நிகழ்வு நடைபெற்ற வளாகத்தைச் சுற்றிலும் மாவிலை தோரணம், வாழை மர அலங்காரம் கலைகட்டியது. இந்திய மாணவர்கள் குறிப்பாக பெண்கள் பாரம்பரிய உடையில் காட்சியளித்தனர். ஆண்கள் அனைவரும் வேட்டி கட்ட வில்லை என்றாலும் கால்சட்டை ஜிப்பா அணிந்திருந்தனர். வேட்டி ஜிப்ப சகிதம் இருந்தவர்களில் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு. அன்பரசனும் ஒருவர்! தமிழர் பண்பாடு தென்பட்டது.

விழா சீருடன் நடைபெற முதல் பருவ மாணவர்கள் சிலர் ஏற்பாட்டுக் குழுவினருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். பிரதான மேடையின் பக்கத்தில் பிற இன மாணவர்களுக்கு பொங்கலின் தத்துவத்தை விளக்க கண்காட்சி பகுதியும் பலரைக் கவர்ந்தது.இந்திய மாணவர்களின் கைவண்ணம் தெரிந்தது. இணையத்தில் திரட்டிய பொங்கல் பற்றிய ஆங்கில விளக்கமும் அங்கு ஒட்டப்பட்டிருந்தது.

அடியேன் பார்த்து இரசித்த மற்றொன்று கோலம்.தாமரை மலரின் மேல் விளக்கு - பல வர்ணங்களிலான அரிசி கோலம். அழகாகவும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலும் இருந்தது.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் திரு. சுரேஷ்வரன், இந்திய பணியாளர் சங்கத் தலைவர் திரு. முனியாண்டி, பேராசிரியர் திரு. சுரேஷ் மற்றும் பல்கலைக்கழக மன்ற பதிவு அதிகாரி திரு. நஸ்ருல் மற்றும் சில பிரமுகர்கள் கலந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.


சுமார் 150 இந்திய மாணவர்களோடு இணைந்து பிற இன ( சீன, மலாய் ) மாணவர்களும் கலந்து கொண்டனர். பொங்கலிடும் போட்டியில் கலந்து கொண்ட 22 குழுக்களில்( ஒவ்வொரு குழுவிலும் 4 - 6 மாணவர்கள் ), 4 குழுக்கள் முழுக்க பிற இனத்தவர் ஆவர். போட்டி இரு பிரிவினர்க்கும் ஏதுவாக நடத்தப்பட்டது. இந்தியர் அல்லாத பிரிவில் கலந்து கொண்ட 3 குழுக்கள் வென்று பரிசையும் தட்டிச் சென்றனர். இந்திய குழுக்களில் மூன்று குழுக்கள் வென்றன. "மச்சி" குழு பொங்கலிடும் போட்டியில் முதலிடம் வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


போட்டியில் கலந்து கொண்ட குழுக்கள் முன்னேற்பாடோடுதான் வந்திருந்தனர் போலும். செங்கல் அடுப்பிட்டு, தீ மூட்டி, மண்சட்டியில் பாலூற்றி 'பொங்கும்' போது குழுவாக 'குலவி' ஓசை எழுப்பினர். சில குறும்பு ஆண் மாணவர்கள் சற்று கூடுதலாகவே கூச்சல் எழுப்பினர். ( அந்த காலத்து அமெரிக்க ஆங்கில படங்களில் சிவப்பு இந்தியர்கள் ஒரு வித ஓசையிடுவார்களே ..அதை ஞாபகப்படுத்தி விட்டனர்) போட்டி விதிமுறைகளில் குழுவினர் ஒத்துழைப்பு, அலங்காரம், பொங்கலின் சுவை என பல கூறுகள் இருந்தன. 22 குழுக்களில் 21 குழுக்கள் பக்குவமாக பொங்கலிட்டு நீதிபதிகளை அழைத்து சுவை பார்க்க்குமாறு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு. அன்பரசன் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! பொங்கலன்றே அவருடைய பிறந்த நாள்! நிகழ்ச்சியை ஓரளவு வெற்றிகரமாக நண்பர்களின் உதவியோடு நடத்திக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் அவர் முகத்தில் தெரிந்தாலும் ஒருவித படபடப்பு இருக்கவே செய்தது. திட்டமிட்டப்படி அனைத்து காரியங்களும் நடைபெற்று நிறைவெய்த வேண்டும் என்ற எண்ணமாக இருந்திருக்க வேண்டும். ( அல்லது, இந்த வாசுதேவன் சார் வேறு வந்து நிறைய குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுகிறாரே...! என்று கூட இருக்கலாம் !)விழா நிறைவுறும் தருவாயில் அன்பரசனுக்கு நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து ( ஆங்கிலத்தில் ) பாடி 'கேக்' ஊட்டி மகிழ்வித்தனர்.

வருகைப்புரிந்த ஆலோசகர்களில் இணைப்பேராசிரியர் திரு.சுரேஷ்வரன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இரத்தினச் சுருக்கமா இருந்தது அவரது உரை. "இவ்வாண்டு மாணவர்களின் பங்கேற்பும் ஆரதவும் நிறைவளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்திய மாணவர்களோடு பிற இன மாணவர்களும் கலந்து பொங்கலிட்டது கண்டு மகிழ்ச்சி. இது எதிர்வரும் காலங்களில் தொடர வேண்டும். மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளைக் கொண்டாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.

யூ.எஸ்.எம் பல்கலைக்கழக இந்திய பணியாளர் சங்கத் தலைவர் திரு.முனியாண்டி அவர்களிடம் பேச சற்று நேரம் கிடைத்தது.அவர், " இம்மாதிரியான பல்லின மாணவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்ச்சிக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியும் நல்லாதரவும் வழங்கி வருகிறது. நம் கலாச்சாரத்தை பிற இனத்தவர்களுக்குக் காண்பிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு" என்றார்.மேலும் அவர்"இது முதல் முயற்சிதான். இனி வரும் காலங்களில் நாம் பெரிய அளவில் பொங்கல் விழா ஏற்பாடு செய்ய இவ்விழா வழிவகுத்துள்ளது" என்று கருத்துரைத்தார்.

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு.அன்பரசன் அவர்களிடம் உரையாடும்போது " இந்த விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக பிற இன மாணவர்கள் கலந்து கொண்டது தமக்கு பெரும் மகிழ்வை உண்டாக்கியுள்ளது" என்றார். ஏற்பாட்டுக் குழு செயலர் குமாரி மனிமொழி சுப்பையா போட்டி முடிவுகளை தேசிய மொழியிலும் தமிழிலும் கவரும் வண்ணம் அறிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரின் பணியும் சிறப்பகவே இருந்தது.

ஒட்டு மொத்தத்தில் இவ்வாண்டின் பொங்கல் விழாவை ஏற்று வழி நடத்திய ஏற்பாட்டுக் குழுவினரை வெகுவாகப் பாராட்டுகின்றேன். நல்ல முயற்சி!


அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.

Friday, January 13, 2006

வலைப்பதிவாளர்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்கள்!


கனிந்த வணக்கம்.

அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

"பொங்கலோ ! பொங்கல் ! பொங்கலோ ! பொங்கல் !

பொங்கி வருகுது பொங்கி வருகுது
நல்லெண்ணம் - இனிநாளும்
தங்கி நிலைத்திட தங்கி நிலைத்திட
நல்வாழ்க்கை - இனிதுன்பம்
வென்று மகிழ்ந்திடு வென்று மகிழ்ந்திடு
மனமே!

அன்புடன்,

எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.

Saturday, January 07, 2006

தமிழ்ப் பள்ளிகளுக்குப் பொற்காலம்!


மலேசியத் திருநாட்டில், கடந்த ஜனவரி, 3-ஆம் நாள் தமிழ்ப் பள்ளிகளின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள். அன்று, 2006 -ஆம் ஆண்டின் பள்ளி துவக்க நாள். நாடு முழுவது அன்று பள்ளிகள் திறக்கப்பட்ட வேளையில், முதலாம் ஆண்டில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்!

ஆரம்பமே அமோகம்! இன்ப அதிர்ச்சியில் தமிழ்ப்பள்ளிகள்!

இந்தப் புத்தாண்டில் கெடா, பேரா, ஜொகூர், நெகிரி செம்பிலான், கூட்டரசுப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து இருப்பதாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் பிரதான அமைப்பாளர் திரு.வி.விக்ரமசூரியா விளக்கமளித்துள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளில் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஏற்கனவே பயிலும் 90 ஆயிரம் மாணவர்களோடு மேலும் 10 ஆயிரம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தனர். 2006-இல், மேலும் 17 ஆயிரம் மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் சேர்ந்திருப்பதன் வழி, தமிழ்ப்பள்ளிகளில் மானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் அனேகப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பதிந்து கொண்டிருப்பதால், இவ்வாரக் கடைசியில் 17 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமை அமைப்பாளர் திரு.வி.விக்ரம சூரியா கூறியுள்ளார்.

இந்த எதிர்ப்பாராத பன்மடங்காக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பினும், முதன்மையாகக் கருதப்படுவது கடந்த ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் ( 6-ஆம் ஆண்டு அடைவு நிலை தேர்வு ) தேர்ச்சி முடிவுளும் அடங்கும்.

"கடந்த சில ஆண்டுகளாக பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளின் மீது காட்டும் ஆர்வமும், சமூகம் தமிழ்ப்பள்ளிகளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அதிகரித்து வருகின்றது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றக் கூடியவர்கள். பிள்ளைகளின் கல்வித்தரம் தமிழ்ப்பள்ளிகளில் உயர்வு கண்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டின் யூ.பி.எஸ்.ஆர் தேர்ச்சி விகிதம் சான்று பகர்கின்றது" என ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு.கே.நடராஜா கருத்துரைத்துள்ளார்.

அதோடுமட்டுமல்லாமல் பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் இப்பொழுது பாலர் பள்ளிகளும் இயங்கி வருவதால் நேரடியாக ஆண்டு 1-இல் சேர்க்கப்படுகின்றனர்.

மேலும், அண்மைய காலத்தில் இந்தியர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள், பொது நல சமூக அமைப்புக்கள், அரசு சார்பற்ற கல்வி, கலை கலாச்சார அமைப்புகளும் எடுத்துக் கொண்ட அக்கறையும் விழிப்பும் நல்ல பலன் கொடுத்திருக்கின்றது எனலாம்.

அடிப்படையில் பெற்றோரிடையே சிந்தனை மாற்றமும் விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதன் வழி 'தமிழ்மொழி' கற்பதோடு தமிழ்ப் பண்பாடு, கலை கலாச்சாரத்தோடு சேர்ந்து வளரும் தமிழ் மாணவர்கள் - சிறந்த கல்வியும் ஒழுக்கமும் உள்ள மாணவர்களாக உருவாகிறார்கள் என்பதை அனுபவ ரீதியில் பெற்றோர் உணரத் தொடங்கி விட்டனர் என்றால் அது மிகையாகாது.


முதலாம் வகுப்பில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்ந்துள்ளாதால் சில பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்பறைகள் நிர்மாணிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வகுப்பறைப் பற்றாக்குறையைச் சமாளிக்கச் சில தலைமையாசிரியர்கள் புதிய அணுகுமுறையைக் கையாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களை மாலைப் பள்ளியில் கல்வி பயில ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழ்ப்பள்ளிகளில் இடப் பற்றாக்குறை பிர்ச்னைகளுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சு உடனடியாக உரிய நடவடிக்கையில் இறங்க வேண்டும். தமிழ்ச் சமுதாயமும் எதிர்பார்க்கிறது!

Sunday, January 01, 2006

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்-2006


வலைப்பதிவாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

"உங்கள் வாழ்வு
புத்துணர்வு பெற,
தெளிவு பெற,
தெய்வீகம் பெற,
உயர் இலட்சியங்களை
நாடவும் அடையவும்
என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!"


அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்
மலேசியா.