.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, June 28, 2004

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்: வரலாற்றில் ஒரு பகுதி!

மலேசியாவில் ( முன்பு மலாயா என்று வழங்கப்பட்டது ) தமிழ்ப்பள்ளிகளின் தொடக்கம் 19-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அந்த காலக்கட்டத்தில்தான் இந்தியர்கள் ஆங்கிலேயர்களால் மலாயாவில் தோட்டப்புறங்களில் வேலைசெய்ய வரவழைக்கப்பட்டுள்ளனர்.

1816 - இல் பினாங்கில் முதன் முதலாகத் தமிழ்ப்பள்ளி துவங்கப்பட்டது என்று சரித்திரம் கூறுகிறது. இருப்பினும் அதன் எண்ணிக்கை மிகக் குறைவு. 1900-ஆம் இறுதியில் நாட்டின் விவசாயம் மற்றும் தோட்டப்புற மேம்பாடின் காரணமாக தென் இந்தியர்களின் வருகையும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையைக் கூட்டியது என்றால் மிகையாகாது.

1912-இல் தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஒரு தோட்டத்தில் குறைந்தது 10 சிறார்கள் பள்ளி செல்லும் பருவத்தை அடைந்தால் கட்டாயம் அங்கு ஒரு பள்ளி கட்டப்படவேண்டும் என்பது விதி. பெரும்பாலும் அவ்வகை பள்ளிகள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. பல தோட்ட மேலாளர்களின் மெத்தனத் தன்மையால் தமிழ்ப்பள்ளிகளின் நிலை மோசமாகியது. சரியான கட்டடம் இல்லாதது அடிப்படை பிரச்னையானது. பிறகு மலாயா கல்விச் சட்டம் தமிழ்ப்பள்ளிகள் தோன்றுவதற்கு வாய்ப்பளித்தது. தமிழ்ப்பள்ளிகளுக்குச் சாதகமான சூழல் 1930 முதல் 1937 ஏற்பட்டதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உண்டு. வேலையுண்டு என்று மலாயா வந்த இந்தியர்களின் நிலை கவலைக்கிடமாகியது. அவர்கள் சரியாக நடத்தப்படவில்லை அடிப்படை உரிமைகளும் இழந்த மாதிரியான நிலை ஏற்பட்டது. அப்போது இந்திய அரசாங்கம் மலாயா வாழ் இந்தியர்களுக்காக ( தமிழர்கள் பெரும்பான்மையினர் ) குரல் கொடுத்தது.அதன் விளைவாக தமிழ்ப் பள்ளிகளிக்கு அதிக மானியம் வழங்கப்பட்டது. தமிழாசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது.

பின்பு, 1956- இல் "ரசாக் அறிக்கை" ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. தனியார் கொள்கையின் கீழ் இருந்து வந்த சிறுபான்மையினர் பள்ளிகள் ( தமிழ்ப்பள்ளிகளோடு சினப்பள்ளிகளும் இதில் அடங்கும்) 1957-இன் கல்விச் சட்டதின் வழி அவை " தேசிய மாதிரி " எனும் அடைமொழியோடு புதிய தோற்றம் கண்டது.

இது மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் ஆரம்ப வரலாற்றின் ஒரு பகுதிதான் !

Sunday, June 27, 2004

உள்நோக்கியப் பயணம் !

அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்கும் சவால்களுக்கும் ஈடுகொடுக்க ஓடுகிறோம்...வெளிநோக்கியப் பயணத்தில். நவீன வாழ்க்கையின் 'கவர்ச்சி' நம்மை அதிவேகமாக ஓட வைக்கிறது இலக்கை நோக்கி! ஒருவகையில் இவ்வெளிநோக்கியப் பயணத்தில் பழகிவிடுகிறோம். கால வோட்டத்தில் இது ஓர் இயந்திரத் தனமான வாழ்க்கைப் பயணமாகிறது.

காலையில் எழுந்தது முதல், இரவு நித்திரை கொள்ளும் வரை எல்லாமே விரைவு, வேகம், அவசரம் என்னும் சார்புடைய சொற்களில் வாழ்க்கை அடங்கிவிட்டதோ!..என்று எண்ணத் தோன்றுகிறது. அளவுக்கு அதிகமான வெளி விசயங்களில் மூழ்கித் தவிக்கிறோம். சில சமயங்களில் சிக்கல் நிறைந்தவர்களின் உள்ளம் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகிறது; அதன் விளைவாக உடலும் தளர்ச்சியடைகிறது.

இதற்கு தீர்வு ஏதும் உண்டா ? என்று நெஞ்சம் விம்முகிறது; அழாமல் அழுகிறது. எங்கிருந்து வெளிநோக்கியப் பயணத்தைத் தொடர்ந்தோமோ -- அங்கிருந்தே தீர்வு காணும் மார்க்கத்தை
சரியானப் பாதையைக் காண்பிக்கிறது 'மனம்' ஆன்மீகப் பயணமாக.....உள்நோக்கியப் பயணத்தில்.

மெய்யுணர்வுக்கு வழிகாட்டுவதுதான் உள்நோக்கியப் பயணம். நல்வாழ்வுக்குச் சுடர் விளக்காய் வெளிச்சத்தை ஊட்டுவதுதான் உள்நோக்கியப் பயணம். வாழ்வின் சூட்சுமத்தை விளங்கச் செய்வதற்கே இந்த உள்நோக்கியப் பயணம்.

மனச் சாந்தி - நிம்மதி இதில்தான் 'வாழ்வின்' உண்மை அர்த்தம் பொதிந்துள்ளது. இலக்கு - இலட்சியம் முக்கியம்தான். ஆனால் போகின்ற பாதை சுமை குறைந்ததாகவும் அன்றாட நிகழ்வுகள் சுவை நிறைந்ததாகவும் அல்லவா இருக்க வேண்டும்.

பி.கு : பழைய பாடல் .........பயணம், பயணம் , பயணம் ...என்று ஆரம்பிக்குமே ( ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! எனப் புதிய மெட்டை நீங்கள் அசைபோடுவது கேட்கிறது ) " புகைவண்டி ஓட்டிட ஒருவன், அது போகின்ற வழி சொல்ல ஒருவன். அந்த இருவரை நம்பிய மனிதன் , அவன் இடையினில் இருப்பவன் இறைவன். இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே... எவரை எவர் வெல்லுவாரோ ?

Wednesday, June 23, 2004

உயர்ந்த எண்ணங்கள்!

ஒவ்வொரு நாள் காலையில் சூரியன் உதிக்கும் திசை நோக்கி உங்களுக்குப் பிடித்த உயர்ந்த எண்ணங்களை மானசீகமாய் வெளியிடுங்கள்....பிரார்த்தனையாக!

"மிக மிக உயர்ந்த எண்ணங்களே வருக ! எவ்வுயிரும் இன்புற்று இருக்க; எவ்வுயிருக்கும் அமைதி நிலவுக; எவ்வுயிரும் ஆனந்தம் பெறுக; எத்திசை உயிர்களும் இவற்றைப் பெறுக !"....இப்படி மனப்பூர்வமாக உள்ளிருந்து வெளிப்படட்டும்!

பிரார்த்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து பிரபஞ்சத்தைத் துணைக்கு அழைக்கும் யுக்திகளில் இதுவும் ஒன்று.

தன்னலம் கருதாமல் செய்து பாருங்கள்; பலன் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கிடைத்தால் அது உங்களுக்கும் கிடைத்த மாதிரிதானே..! கொடுத்தால் பெறலாம்!

பி.கு : 'கொடுத்து வைத்தவர்கள்' என்ற சொற்றொடரை பிறரைப் பார்த்து சொல்வது வழக்கில் உள்ளதே.....கொஞ்சம் யோசித்தால் தெரியவரும் அவர்கள் எதை? எப்போது? கொடுத்தார்கள் என்று.

Tuesday, June 15, 2004

எந்த வீட்டுக்குப் போவது ?

ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை. முல்லாவில் வழக்கறிஞர், "நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூட பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார்.முலாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே அமைதியாக இருந்த்தால்ஒரு புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, "சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,"என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கு வெற்றியாக முடிந்த மகிழ்ச்சியில் " நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்கு நான் போவது ?" என்று கேட்டார்.

பி.கு : ஒரு வார்த்தை போதும், நம் மனதில் என்ன இருக்கிறதென்று அது காட்டிக் கொடுத்துவிடும்.

Monday, June 14, 2004

விவேகம் தரும் சிந்தனைகள் - 1

உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள்
உங்கள் நம்பிக்கை மாறும்!
உங்கள் நம்பிக்கையை மாற்றுங்கள்
உங்கள் எதிர்பார்ப்பு மாறும்!
உங்கள் எதிர்ப்பார்ப்பை மாற்றுங்கள்
உங்கள் மனப்பான்மை மாறும்!
உங்கள் மனப்பான்மையை மாற்றுங்கள்
உங்கள் நடவடிக்கை மாறும்!
உங்கள் நடவடிக்கையை மாற்றுங்கள்
உங்கள் செயல்திறன் மாறும்!
உங்கள் செயல்திறனை மாற்றுங்கள்
உங்கள் வாழ்க்கை மாறும்!


பி.கு : அண்டம் பிண்டம் இரண்டுக்குமே எது நிலையானது ? மாறுதல் ஒன்றே நிலையானது !

Saturday, June 12, 2004

விடுகதை - வாய்மொழி இலக்கியம் !

ஒருவரின் நுண்ணறிவை ஒருவர் அறிவதற்கு எழுப்புகின்ற புதிர்களே விடுகதைகள் எனப்படும். ஏட்டில் எழுதப்பெறாத இலக்கியம் என்று விடுகதைகளைக் கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விடுகதைகள் போடுவதைக் காணலாம்.இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் கூறுவார்கள்.

பொதுவாக விடுகதைகள் இரண்டு வகையாக அமைந்துள்ளன. ஒன்று கவிதை நடையில் அமைந்துள்ளவை; மற்றொன்று உரைநடையில் அமைந்தவை. மக்களின் சிந்தனைத் திறனையும் கற்பனைத் திறனையும் விடுகதைகள் பெரிய அளவில் காட்டுகின்றன.சில விடுகதைகள் எதுகை - மோனையுடன் அழகான சொல்லாட்சி பெற்று விளங்குகின்றன.

எல்லாக் காலங்களிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் கேட்டின்புறும் வகையில் அமைந்திருப்பது விடுகதைகள் ஆகும். குழந்தைகள் இருக்கும் வீட்டில், ஓய்வு நேரத்தில் விளையாட்டாக விடுகதை போட்டுப் பாருங்களேன்...ஒரே மகிழ்ச்சியலை எழும்பும். வேடிக்கை என்ன வென்றால் ...நாம் போட்ட விடுகதைகளை பிறகு வீட்டிற்கு வருபரையெல்லாம் பார்த்து குழந்தைகள் மழலை மொழியில் 'அது என்ன ?...அது என்ன ? ' என்று கேட்கும் விதமே தனி அழகு!

விடுகதைகளைப் பெரும்பாலும் யாரும் எழுதி வைப்பதில்லை.(என் கருத்து தவறாகக் கூட இருக்கலாம்) குறைந்த அளவிலேயே விடுகதைகள் பற்றிய புத்தகங்களைப் பார்த்திருக்கின்றேன். அது ஒரு புறம் இருக்கட்டும். சரி, இப்போது சில விடுகதைகள் போடட்டுமா? ( என்ன எங்களையும் குழத்தைகள் பட்டியலில் சேர்த்து விட்டீர்களா.? என்று கேட்பது புரிகிறது. உங்களை வளர்ந்த குழந்தை உள்ளம் கொண்டவர்கள் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா ? )


1. அகத்தில் அகம்
சிறந்த அகம்.
அது என்ன அகம் ?

2. வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி
அது என்ன ?

3. குட்டைப் பெண்ணுக்குப்
பட்டுப் புலவை.
அது என்ன ?

4. ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?


விடை தெரிந்தால் பதில் போடுங்கள்; வீட்டில் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள்!

பி.கு : புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் குழந்தைகளிடம் இம்மாதிரி விடுகதைகள் போடுவது வழக்கில் உள்ளதா ? மறுமொழி எழுதலாமே..!

சிரிப்பூ இதயத்தின் பூரிப்பு

இப்போதெல்லாம் மருத்துவ மேதைகள் நோயாளிகளை வாய்விட்டுச் சிரிக்கச் சொல்கின்றனர். நன்றாகச் சிரித்தால் இதயம் வலுவடையும் என்கிறார்கள்.

சிரிப்பினால் பல நன்மைகள் உண்டு. நம்மைப் பற்றி நாமே தெரிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும். ஒருவருடைய சிரிப்பை வைத்தே அவருடைய குணங்களைக் கூற முடியும் என்பது மனோதத்துவ அறிஞர்களின் கருத்து
.( சரி, மருந்துக்கு ஒன்று )

ஒரு சுடுகாட்டுலே, ஒரு கல்லறைக்கு மேலே, கால்மேலே கால் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தான் ஒருத்தன். அந்த வழியா போன ஒருத்தர் அவனைப் பார்த்தார்; கேட்டார்: "ஏம்பா இப்படி பேய் பிசாசு நடமாடுற இந்த மயானத்துல கல்லறைக்கு மேலே உட்கார்ந்திருக்கே ?"

"எவ்வளவு காலம்தான் உள்ளேயே இருக்கிறது....ஒரே புழுக்கமா இருந்தது....அதுதான் காத்து வாங்கலாம்னு வெளியே வந்தேன்" அப்படினுச்சாம் அந்த ஆசாமி!


பின் குறிப்பு : உங்கள் சிரிப்பு வலைப்பூவுக்குள் ஒரு மத்தாப்பு ( அப்படியொன்றும் சிரிப்பு வரவில்லை என்று நீங்கள் மனோதத்துவ மருத்துவரையெல்லாம் கண்டு பின் அவர் உங்களைப் பார்த்து சிரித்தாலும் பாதகமில்லை. ஏனெனில், சிரிப்பதும், சிரிப்பூட்டுவதும் நல்ல செயல்களே!)

Friday, June 11, 2004

வாடாத பூ - டாக்டர். மு.வா

தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசன் அவர்கள் தமிழ்க்கூறு நல்லுலகின் எழுத்து வேந்தர். நற்றமிழ் நூல்களை இயற்றி சாதனை படைத்தவர். அவர் எழுதிய முதல் நூல் எதைப் பற்றியது என்று அறிவீர்களா ? இன்று அறிந்தேன்; வாசகர்களுக்கு..
வழங்க விழைந்தேன். ( குமுதம் வழி யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வலைப்பூ எங்கும் )
'குழந்தைப் பாட்டுக்கள்' என்பதே அவர் எழுதிய ( 1939-இல் ) முதல் நூல். அதில் 'வாடாத பூ' என்ற பாடலை எப்படி இயற்றியுள்ளார் என்று பாருங்கள் :


ரோஜாப்பூ வாடிவிடும்
சண்பகப் பூ வாடிவிடும்
மல்லிகைப் பூ வாடிவிடும்
முல்லைப் பூ வாடிவிடும்
வடாத பூ எதுவோ ?
வளருகின்ற இடம் எதுவோ ?
வாடாத பூ அறிந்தேன்
வளருகின்ற இடம் அறிந்தேன்
வாடாத பூ படிப்பூ !
வளரும் இடம் பள்ளிக்கூடம் !


பி.கு : அதில் ஈற்றடி இரண்டும் என் மனதில் இப்படியும் பாட வைத்தது....
வாடாத பூ வலைப்பூ
வளரும் இடம் வலைதளக்கூடம் ... என்று!Wednesday, June 09, 2004

மாறட்டும் மனோபாவம் !

நம் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்பதெல்லாம் எது ? நமது மனோபாவம்தான்.
சில சமயங்களில் ஒரே விதமான செயல்களில் சூழ்நிலைக் கைதிகளாக இருந்து விடுகிறோம். இச்சூழலிலிருந்து விடுபட என்ன செய்யலாம் ?விவேகமாக வித்தியாசமாக வரும் விசயங்களை மனதில் அசை போடலாம்; அதோடு இயைந்து வினையாற்றலாம்.

மனோபாவம் ஆரோக்கியமடைய வேண்டுமென்றால், புது இரத்தம் போல், புதிய எண்ணங்கள் நம் மனோபாவத்துக்குள் வெள்ளமாய்ப் பாய்ந்து நம் சிந்தனையை வளப்படுத்த வகைசெய்தல் வேண்டும்.

நற்சிந்தனைகள் விளைந்தால்தான் அரிய செயல்கள் கிடைக்கும். ஏனெனில், எந்தச் சாதனைக்கும் ஆணிவேராகவும் மூலக்கருவாகவும் இருப்பது உயர்ந்த சிந்தனைதான் !

வாழ்த்துக்கள் அன்பர்களே..

பி.கு: அருவத்தில் ஆரம்பித்ததுதான் எமது முந்தைய வலைப்பதிவுகள். அருவுருவத்திற்கு வந்திருக்கின்றேன் இப்போது.

தன்னை அறியும் அறிவு !

தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே !

- திருமூலர்

Tuesday, June 08, 2004

ஓர் பொருள் !

" உய்வதனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்
"
என்றார் பாரதியார்


இந்த வரிகளைப் படித்த போது மனம் ...விஞ்ஞான விந்தைகளைத் தாண்டி மெய்ஞ்ஞான விளிம்பில் நின்று
நர்த்தனமாடியது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது எமக்கு. உங்களுக்கு ?

அத்வைதம்...நிதர்சனம்.

விவேக முயற்சி !

ஓம்.கனிந்த வணக்கம்.

வளர்ந்த மனிதர்கள் திறந்த மனத்தோடு எதையும் பார்க்கிறார்களாம்...குழந்தைகள் போல!

அன்புள்ள மின்தமிழ் வாசகர்களையும் அத்தகைய மனோபாவம் கொண்டவர்களாகப் பாவித்து இருகரம் கூப்பி அழைக்கிறது இந்த வலைப்பூவில் வலம் வரும் ( வளர்ந்து வரும் ) மற்றொரு புதிய குழந்தை.

விளையாட்டு முயற்சியா அல்லது விவேக முயற்சியா என்பதைக் காலமோ ( களமோ ) பதில் சொல்லட்டும்!

நன்றி.